மழலையர் பள்ளிகளுக்கு அறிவித்த விடுமுறையில் மாற்றமில்லை-முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

“மழலையர் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவித்த விடுமுறையில் மாற்றமில்லை” என மதுரையில் நேற்று அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திண்டுக்கல்லில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து அவர் மாலை 5.30 மணி அளவில் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மழலையர் பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி விடுமுறைதான். மார்ச் 16-ந் தேதி (நாளை) முதல் 31-ந் தேதி வரை மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதில் எந்த மாற்றமும் இல்லை. கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து தினம் மூத்த அமைச்சர்கள், வருவாய்த்துறை அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சர் உள்ளிட்டோருடன் ஆலோசித்து இருக்கிறோம். அது குறித்த விரிவான அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக வணிக வளாகங்கள், பள்ளிக்கூடங்களை மூட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். வணிக வளாகங்களை மூட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவிற்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. எனவே அதனை பற்றி கருத்து கூறுவது சரியாக இருக்காது. கட்சி ஆரம்பிக்காதபோது தேவையில்லாத கருத்தை தெரிவிக்கக்கூடாது. கட்சி ஆரம்பித்த பின் அதுதொடர்பான கருத்தை கூறுவோம்.

பா.ஜ.க. தமிழக தலைவர் எல்.முருகன் கட்சியின் வளர்ச்சிக்காக கூட்டணி கட்சியான அ.தி.மு.க.விடம் அதிக இடங்கள் கேட்போம் என கூறியிருக்கிறார். கட்சி வளர வேண்டும் என்ற ஆசையில் அவர் அப்படி கூறுகிறார். புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்சி தலைவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக கூட்டணி கட்சிகளிடம் கூடுதல் இடங்களை கேட்பது வழக்கம் தான். அதில் எந்த தவறும் இல்லை.

இது மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், அரசியலுக்கு வரலாம். கமல்ஹாசனின் சக்தியை கடந்த தேர்தலில் பார்த்து விட்டோம். இதுபோல், அ.ம.மு.க. அடுத்த தேர்தலுக்கு பின் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சிறுபான்மையின மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். சிறுபான்மையின மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சட்டமன்றத்தில் அமைச்சர் உள்ளிட்டோர் தெளிவாக கூறிவிட்டோம். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. சிறுபான்மையினர் அச்சத்தை போக்க அரசு சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment