கொரோனா தடுப்பு நடவடிக்கை: 31-ந்தேதி வரை அனைத்து ரெயில்களும் ரத்து புறநகர் மின்சார ரெயில்களும் இயங்காது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ந்தேதி வரை அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் இந்தியாவில் ரெயில்களில் பயணிப்பதன் மூலமாக அதிகளவில் பரவுவதால், பொது மக்கள் ரெயில் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும் நேற்று நாடு முழுவதும் அனைத்து ரெயில்களையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ரெயில் ரத்து வரும் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று மீண்டும் இந்தியன் ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா எதிரொலியால் வருகிற 31-ந்தேதி நள்ளிரவு வரை அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. அந்தவகையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் திருச்செந்தூர், பாண்டியன், முத்துநகர், பல்லவன், பொதிகை, கன்னியாகுமரி, வைகை, நெல்லை, கம்பன், ராமேஸ்வரம், கொல்லம், தேஜஸ், தாதர், குருவாயூர், திருச்சி, அனந்தபுரி, புதுச்சேரி, மன்னார்குடி, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரலில் இருந்து புறப்படும் பினாக்கினி, ராஜஸ்தானி, பிருந்தாவன், சதாப்தி, ஹுப்ளி, மைசூரு, சப்தகிரி, கோவை இன்டர்சிட்டி உள்பட சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு புறப்படும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வருகிற 31-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கோட்டத்தில் நேற்று நள்ளிரவு வரை பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது.

இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) முதல் 31-ந்தேதி நள்ளிரவு வரை சென்னை கோட்டத்தில் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு மின்சார ரெயில்கள் எதுவும் சென்னையில் இயக்கப்படாது. ஆனால் சரக்கு ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment