பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து 21 நாள் ஊரடங்கால் வெறிச்சோடிய இந்தியா மளிகை கடைகளில் கூட்டம்

பிரதமர் மோடியின் அறிவிப்பை தொடர்ந்து, 21 நாள் ஊரடங்கு தொடங்கியதால் ஒட்டு மொத்த இந்தியாவும் வெறிச்சோடியது. பல மாநிலங்களில் பொருட்கள் வாங்க மளிகை கடைகளில் கூட்டம் கூடியது.

உலக அளவில் பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தனித்து இருப்பதுதான் ஒரே வழி ஆகும். இதனால் நாடு முழுவதும் மருத்துவம், பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய சேவைகள் தவிர பிற சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

பிரதமர் அறிவித்தபடி 21 நாள் ஊரடங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தொடங்கியது. இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்த கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து முடங்கியதால், ஒட்டுமொத்த இந்தியாவே வெறிச்சோடியது.

நீண்ட நாட்கள் ஊரடங்கு என்பதால் விலைவாசி உயரும் என்ற ஆபத்து இருப்பதாக கருதியும், பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்திலும் நேற்று டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் மளிகை கடைகளில் கூட்டம் அலைமோதியது.

டெல்லியில் ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில கவர்னர் அனில் பைஜால் அறிவித்து உள்ளார்.

கூட்டம் கூடக்கூடாது என்று அரசு எச்சரித்துள்ள போதிலும் கொல்கத்தாவில் உள்ள மார்க்கெட்டுகளில், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். பல ஊர்களில் கூடுதல் சிலிண்டர்கள் வாங்குவதற்காக சமையல் கியாஸ் ஏஜென்சிகள் முன்பு மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகனங்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வாகனங்களில் சென்ற சிலரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினார்கள்.

மத்திய உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், உணவுப் பொருட்களின் சப்ளையையும் மார்க்கெட் நிலவரத்தையும் அரசு கண்காணித்து வருவதாகவும், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை இன்றி மக்களுக்கு கிடைக்கும் வகையில், மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் கூறினார்.

No comments:

Post a Comment