டி.என்.பி.எஸ்.சி. அதிகாரியின் இ-மெயில் மூலம் குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றதாக வாலிபருக்கு தகவல் அனுப்பி ரூ.27 லட்சம் மோசடி...

குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக வாலிபருக்கு டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி இ-மெயில் மூலம் தகவல் அனுப்பி ரூ.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை அரசரடி சம்மட்டிபுரம் பாண்டியன் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். அவருடைய மகன் மதுரூபன். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வை எழுதி இருந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதுரூபனுக்கு டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் முகவரியில் இருந்து இ-மெயில் வந்துள்ளது. அதில் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக அந்த இ-மெயில் வந்த முகவரியை சோதனை செய்து பார்த்தபோது அது டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் பணியாற்றும் உயர்அதிகாரியின் இ-மெயில் முகவரி என்பது தெரிந்தது.

அந்த சமயத்தில் சண்முகசுந்தரத்தை தொடர்பு கொண்ட சென்னை குன்றத்தூர் கொல்லஞ்சேரியை சேர்ந்த சிவா, சென்னை புளியந்தோப்பு ஆசீர்வாதபுரத்தை சேர்ந்த நாகேந்திரராவ் மற்றும் ரமணி என்ற ராஜேந்திரன், வெங்கடாசலம் ஆகியோர் குரூப்-2 தேர்வில் மதுரூபனை தேர்வு செய்ய வைத்துள்ளதாகவும் இதற்காக ரூ.27 லட்சம் கொடுத்தால் பணி நியமன ஆணை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ இ-மெயில் மூலம் வந்த தகவல் என்பதால் சண்முகசுந்தரம் ஓய்வூதிய பணம் ரூ.11 லட்சம் மற்றும் நிலத்தை அடமானம் வைத்து மீதம் உள்ள பணம் என மொத்தம் ரூ.27 லட்சம் மேற்கண்ட நபர்களிடம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராமேசுவரம் கோவில் அருகில் வைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் வேலைக் கான நியமன ஆணை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதுகுறித்து சண்முகசுந்தரம் அவர்களிடம் கேட்டபோது டி.என்.பி.எஸ்.சி. அதிகாரியிடம் அந்த பணத்தை கொடுத்துவிட்டதாக கூறி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகசுந்தரம் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம் இதுகுறித்து புகார் செய்தார். அவரின் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள இ-மெயில் முகவரியில் இருந்து வாலிபர் மதுரூபன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலை யார் அனுப்பியது? அது முக்கிய உயர் அதிகாரியின் அரசு இ-மெயில் முகவரி என்பதால் அதன்மூலம் தகவல் அனுப்பியது யார்?

இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? உயர் அதிகாரிகள் யாரும் இதுபோன்ற செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில் அதேபோன்று மற்றொரு மோசடி ராமேசுவரத்தை மையமாக வைத்து நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment