ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல் சட்டசபையில் அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல் செய்யப்படுவதாக சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்

நாடு முழுவதும் வரும் ஜூன் மாதம் முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) வைத்திருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து மற்றொரு மாநிலத்துக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள், மாநிலத்தில் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க வகை செய்யும் திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இரு மாவட்டங்களில் அமல்

இதற்கிடையே தமிழ்நாட்டில், கடந்த 2014-ம் ஆண்டு ரூ.318 கோடியே 40 லட்சம் செலவில் பொது விநியோக திட்டம் கணினி மயமாக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 2 கோடியே 5 லட்சத்து 3 ஆயிரத்து 379 குடும்பங்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. அவற்றுடன் ஆதார் மற்றும் செல்போன் எண்களும் இணைக்கப்பட்டன.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், முதலில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு இரு மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.

சட்டசபையில் அறிவிப்பு

வெற்றிகரமாக இந்த திட்டம் அமைந்ததால், தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தார்.

அதாவது, சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை தொகுதி) பேசினார். அவர் பேசும்போது, தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பினார்.

ஏப்ரல் 1-ந் தேதி முதல்...

அதற்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இந்த இரு மாவட்டங்களிலும் மொத்தம் 9 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருக்கின்றனர். இவர்களில் 9 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வேறு கடைகளில் பொருட்கள் வாங்கியுள்ளார்கள். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் எந்த சிக்கலும் வரவில்லை.

முதல்-அமைச்சரின் ஒப்புதலை பெற்று இந்த அறிவிப்பை வெளியிடுகின்றேன். வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. எந்த ரேஷன் கடைக்கும் சென்று பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment