கால்நடை மருத்துவத்துறை பணியிடங்களுக்கான தேர்வு சென்னையில் மட்டுமே நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு


  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கால்நடை மருத்துவத்துறையில் காலியாக உள்ள 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் 18-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது. 
  • இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சாவூர் ஆகிய 7 தேர்வு மையங்களில் வருகிற 23-ந் தேதி காலையிலும், மாலையிலும் நடைபெற இருந்தது. 
  • இந்த நிலையில் தற்போது இந்த தேர்வினை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடத்த தேர்வாணையம் முடிவு செய்து இருக்கிறது. இந்த தேர்வுக்கு சென்னை தவிர இதர தேர்வு மையங்களை தேர்வு செய்திருந்த விண்ணப்பதார்களுக்கு இதுதொடர்பாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • சமீபத்தில் குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஈடுபட்டவர்கள் சில குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தான் முறைகேட்டை அரங்கேற்றி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. 
  • அதன்பிறகு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் பல்வேறு அதிரடி முடிவுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த இந்த கால்நடை மருத்துவத்துறை காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் மட்டும் நடத்த திட்டமிட்டு இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

1 comment: