என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் தஞ்சை பல்கலைக்கழகத்துக்கு, தகவல் ஆணையம் உத்தரவு.

  • மத்திய அரசு போட்டித்தேர்வுகளில் தமிழக மாணவர்களும் வெற்றி பெறும் வகையில், என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை தமிழில் மொழிபெயர்த்து வழங்குமாறு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
  • மத்திய அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகள், ரெயில்வே தேர்வுகள், வங்கி, தபால் துறை போன்ற தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படுகின்றன. 
  • இந்த தேர்வுக்கான கேள்விகள் பெரும்பாலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. 
  • எனவே தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று ஆவடியை சேர்ந்த ஆர்.சந்தர் என்பவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மனு அனுப்பினார். 
  • அதற்கு பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் வரவில்லை. இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் மேல்முறையீடு செய்தார். அவரும் பதில் அளிக்காததால், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் புகார் செய்தார். 
  •  இதை மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் விசாரித்தார். இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். 
  • விசாரணைக்குப்பின் தகவல் ஆணையர் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- 
  •  தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மொழி பெயர்ப்பு துறையின் பணிகளில் புத்தகங்களையும் மொழி பெயர்க்க வகை செய்யப்பட்டுள்ளது. 
  • தமிழக மாணவர்கள் தங்களின் பள்ளிப்படிப்பை பெரும்பாலும் தமிழில் படிப்பதால் அவர்களால் மேல்படிப்புகளுக்கு செல்வதிலும், மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதும் கடினமாக உள்ளது. 
  • குறிப்பாக நீட், யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி. ஆகிய தேர்வுகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுவதால் அந்த பாடத்திட்டத்தில் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். 
  • ஆனால், தமிழ் வழியில் படித்த மாணவர்களால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை. 
  • எனவே, தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய புத்தககங்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். 
  • இந்த மொழிபெயர்ப்புகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment