இனி குரூப் 2ஏ, குரூப் 4-க்கு இரு தேர்வுகள்; விடைத்தாள் பாதுகாப்புக்கு ஜிபிஎஸ், கேமரா வசதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

 • இனி குரூப் 2ஏ, குரூப் 4ஆகியவற்றுக்கு இரு தேர்வுகள் நடத்தப்படும், தேர்வர்களின் கைரேகை கட்டாயம் உள்ளிட்ட சில மாற்றங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 
 • அண்மையில் குரூப் 2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, டிஎன்பிஎஸ்சி 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது. 
 • அதேபோல தேர்வுக்கு ஆதார் கட்டாயம் உள்ளிட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது மேலும் சில மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 
 • குரூப் 2ஏ மற்றும் குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு இனி முதனிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. தேர்வு சரியாக காலை 10 மணி முதல் 1 மணி வரை நடக்கும். இதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே தேர்வர்கள் வர வேண்டியது அவசியம். 10 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்களுக்கு அனுமதி இல்லை. 
 • காலை, மாலை இரு வேளைகளிலும் தேர்வு எனும்போது பிற்பகல் 3 மணிக்கு மாலைத் தேர்வு தொடங்கும். இனி வரும் கொள்குறி வகைத் தேர்வுகளில் அனைத்து வினாக்களுக்கும் கட்டாயம் விடையளிக்க வேண்டும். 
 • எந்தக் கேள்விக்காவது விடை அளிக்கவில்லை என்றால், கூடுதலாக அளிக்கப்படும் E என்ற வட்டத்தைக் கருமையாக்க வேண்டும். 
 • எந்தெந்தக் கேள்விக்கு எந்தெந்த விடையை (A,B,C,D E) அளித்துள்ளார் என்பதையும் குறிப்பிட வேண்டும். 
 • இதற்குக் கூடுதலாக 15 நிமிடங்கள் அளிக்கப்படும். தேர்வருடைய விடைத்தாளை அடையாளம் காண முடியாதபடி, விடையளிக்கும் பகுதியில் தேர்வரின் கையெழுத்துக்குப் பதிலாக இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும். 
 • விடைத்தாள்களைப் பாதுகாப்பான முறையில் தேர்வாணையத்துக்கு எடுத்து வர, அதி நவீன ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்புக் கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 
 • இதை நேரலையாக தேர்வாணைய அலுவலகத்தில் கண்காணிக்க 24 மணி நேரக் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்படும். 
 • தகவல்கள், கருத்துகளைத் தெரிவிக்க புதிய வசதி தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க தேர்வாணைய இணையதளத்தில் சிறப்புத் தகவல் தளம் உருவாக்கப்படும். 
 • தேர்வாணையத்தின் ஆக்கபூர்வமான மாற்றங்கள் குறித்த பின்னூட்டங்களைத் தேர்வர்கள் பகிர்ந்து கொள்ளலாம். அவர்களின் ரகசியத் தன்மை பாதுகாக்கப்படும்''. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment