குரூப்-2ஏ தேர்வு முறைகேடு: தலைமைச் செயலக ஊழியர் உள்பட 3 பேர் கைது இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு


 • குரூப்-2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் தலைமைச் செயலக ஊழியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தரகர் ஜெயக்குமார் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 
 • டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களையொட்டி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
 • குரூப்-4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவந்தது. குரூப்-2ஏ தேர்வில் 69 பேர் முறைகேடு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 • குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்று காரைக்குடி முத்துப்பட்டினம் சார்-பதிவாளராக பணியாற்றிய வேல்முருகன் என்பவரும், நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த ஜெயராணி என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
 • இவர்களில் ஜெயராணி போலீஸ்காரர் முத்து என்பவரின் மனைவி ஆவார். குரூப்-2ஏ முறைகேடுகளுக்கு போலீஸ்காரர் முத்து இடைத்தரகராக செயல்பட்டு உள்ளார். 
 • இதனால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான வேல்முருகனின் சகோதரர் சித்தாண்டி சென்னை ஆயுதப்படை போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். 
 • அவரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். 
 • குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த மொத்த முறைகேடுகளுக்கும் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் என்பவரை போலீ சார் தேடி வருகிறார்கள். 
 • அவர் போலீஸ் கையில் சிக்காமல் வெளிமாநிலத்துக்கு தப்பியோடி விட்டார். அவரை கைது செய்ய துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் முதலில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். 
 • தற்போது தக்க சன்மானம் என்பது ரூ.1 லட்சம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்ற மேலும் 3 அரசு ஊழியர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர். 
 • அவர்களில் ஒருவரது பெயர் சுதாதேவி (வயது 28) ஆகும். இவர் சென்னை கொரட்டூரை சேர்ந்தவர். 
 • முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரின் கார் டிரைவர் சம்பத்தின் மனைவியான இவர், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 • இவர் தனது வேலைக்காக ரூ.8 லட்சத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். இதுதவிர குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்வதற்காக பலரிடம் ரூ.38 லட்சம் வரை வசூல் செய்து ஜெயக்குமாரிடம் கொடுத்ததாக தெரிகிறது. 
 • இதேபோல சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்த விக்னேஷ் (28) என்ற அரசு அதிகாரியும் நேற்று கைது செய்யப்பட்டார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறையில் உதவியாளராக பணியாற்றி வந்தார். 
 • இவர்கள் இருவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். 
 • மேலும் தூத்துக்குடியை சேர்ந்த அரசு ஊழியர் சுதா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர். இவர் வேலைக்காக ரூ.7 லட்சம் கொடுத்துள்ளார். 
 • இதுதவிர காஞ்சீபுரத்தை சேர்ந்த மற்றொரு அரசு அதிகாரி திருஞானசம்பந்தம் என்பவரை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சென்னை அழைத்து வந்தனர். இவரும் முறைகேடு மூலம் குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்றதாக புகார் வந்துள்ளது. 
 • இதற்கிடையே தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டியின் மனைவி சண்முகபிரியாவும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவரும் சென்னையில் அரசு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment