பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்

பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டு ரோட்டுக்கு அருகே ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நாளை (இன்று) நடைபெற உள்ளது.

முதல் கட்டமாக, கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா, விவசாய பெருவிழா நடைபெறுகின்றது. இதில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவை வந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்றும் கோரிக்கை வந்து கொண்டிருக்கின்றதே?

பதில்:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உண்டான பணிகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது.

கேள்வி:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டுக்கு அரசு உடந்தையாக உள்ளதா?

பதில்:- எப்படி உடந்தையாக இருக்கின்றோம் என்று சொன்னால்தானே தெரியும். அ.தி.மு.க. அரசை பொறுத்தவரைக்கும், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதினால் அதில் தலையிடவில்லை. மேலும் அதில் நடைபெற்றுள்ள தவறினை அறிவதற்கு அந்த அமைப்பு உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு புகார் செய்து, காவல்துறையும் விசாரணை மேற்கொண்டு, தவறில் ஈடுபட்டவர்களை கைது செய்து, விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றது.

கேள்வி:- குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்திக்கொண்டிருக்கின்றதே?

பதில்:- அது அவர்களுடைய விருப்பம்.

கேள்வி:- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்துத்துவா அமைப்பை போல செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சொல்லியிருக்கின்றனரே? வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நீலகிரியில் மாணவனை காலணியை கழற்ற சொன்னது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வயது முதிர்ந்தவர். அவருக்கு சுமார் 70 வயதாகின்றது. அவர் அணிந்திருந்த காலணிக்கும், காலுக்கும் இடையே மாட்டிக்கொண்ட குச்சியை குனிந்து எடுக்க முடியவில்லை. அதனால் அருகாமையில் இருந்த சிறுவனை அழைத்து அதை எடுக்கச் சொல்லியிருக்கின்றார். அதை அவர் தெளிவாக தெரிவித்ததுடன், அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார். மேலும் அந்த சிறுவன் என்னுடைய பேரன் போல் இருக்கின்றார். உதவிக்கு தான் அழைத்தேன் என்று தெரிவித்திருக்கின்றார். ஆனால் அதை பெரிதுபடுத்தி பேசுகிறார்கள். இதனை ஊடகங்களும், பத்திரிகைகளும் பெரிதுபடுத்துவது உண்மையிலேயே வேதனை அளிக்கின்றது. அ.தி.மு.க. அமைச்சர்களோ, நிர்வாகிகளோ யாரும் அப்படிப்பட்ட செயலில் ஈடுபடமாட்டார்கள்.

அதேபோல ராஜேந்திர பாலாஜி மீது என்ன குற்றச்சாட்டு என்று எனக்கு தெரியவில்லை. அவர் பக்திமான். அது நன்றாக தெரியும். அவர் அவருடைய சொந்த கருத்தை சொல்லியிருக்கலாம். அது அ.தி.மு.க.வின் கருத்து அல்ல என்பதை எங்களுடைய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கேள்வி:- பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா?

பதில்:- அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்துவிட்டால் அந்த மாணவனின் தகுதியை எப்படி நிர்ணயம் செய்வது? அப்படி செய்தால் மாணவர்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடும். தேர்வு வைத்தால் தான் அந்த மாணவனின் தகுதியை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அறிந்துகொள்ள முடியும். பெற்றோருடைய கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ரத்து செய்திருக்கிறார்.

கேள்வி:- இடைநிற்றல் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கின்றனரே?

பதில்:- இடைநிற்றல் குறித்த புள்ளி விவரங்களை யாரும் தெரிவிக்கவில்லையே. அவ்வாறு பேசுவது உண்மையல்ல. இடைநிற்றலை தவிர்ப்பதற்கு அரசால் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

No comments:

Post a Comment