பிளஸ்-1, பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் அரசு தேர்வுகள் இயக்குனர் தகவல்.

பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத, சேவை மையங்களின் வாயிலாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உள்பட) தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை (ஹால்டிக்கெட்) இன்று(புதன்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

ஏற்கனவே எழுத்து தேர்வெழுதி, எழுத்து தேர்வு மற்றும் அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத்தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத்தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அந்த தேர்வர்கள் மீண்டும் எழுத்துத்தேர்வு எழுத வேண்டாம். மற்றவர்கள் எழுத்து தேர்வு, செய்முறைத் தேர்வு என இரண்டையும் கட்டாயம் எழுதவேண்டும்.

செய்முறைத்தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வர்கள், கருத்தியல் தேர்வு நடைபெறும் நாட்களுக்கு முன்னரே தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரத்தை அறிந்துகொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment