‘செமஸ்டர்’ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர்கள் விடைத்தாள்களை சரிபார்த்து கொள்ளும் வசதி அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் அறிமுகம்


 • ‘செமஸ்டர்’ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர்கள் விடைத்தாள்களை சரிபார்த்து கொள்ளும் வசதி அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.   
 • அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு ஊழல் நடந்ததாகவும், இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 
 • அதன் தொடர்ச்சியாக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் சில மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 • அந்த வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. 
 • அதாவது தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களை பெற்று சரியான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். இதற்கு முன்பெல்லாம் ஒரு மாணவர் தான் எழுதிய தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என்றால், விடைத்தாள் நகல் கேட்டு ரூ.300 செலுத்தி முதலில் விண்ணப்பிக்க வேண்டும். 
 • விடைத்தாள் வந்ததும் அதனை சரிபார்த்து, அதில் மதிப்பீடு குறைவாக மதிப்பிடப்பட்டு இருந்தால், மறுமதிப்பீடு செய்ய ரூ.200 செலுத்த வேண்டும். ஆனால் இந்த புதிய நடைமுறையில் அதுபோன்ற எந்த கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த தேவையில்லை. 
 • அதுவும் தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே மதிப்பீட்டை சரிபார்த்து கொள்ளும் இந்த வசதி மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. 
 • இந்த நடைமுறை அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, சென்னை தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி), கட்டிட வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் கல்லூரி (ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அண்டு பிளானிங்) ஆகியவற்றில் அமல்படுத்தப்படுகிறது. 
 • இது உடனடியாக அமலுக்கு வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு (2019) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற ‘செமஸ்டர்’ தேர்வு விடைத்தாள்களை மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு முன்பாகவே சரிபார்த்துக்கொள்ளலாம். 
 • அதில் மறுமதிப்பீடு செய்ய வேண்டி இருந்தால் அதுகுறித்து ஆய்வு செய்ய ஒவ்வொரு துறைக்கும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 
 • இந்த குழுவில் துறைத்தலைவர், பாடப்பிரிவு பேராசிரியர், பாட வல்லுனர் இருப்பார்கள். இவர்கள் மாணவர்கள் கூறும் மதிப்பீட்டு திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள். 
 • இதற்கென்று ஒவ்வொரு துறை சார்பில் மதிப்பீட்டு திருத்தங்கள் தினம் (‘வேலுயேஷன் கிளாரிபிகேஷன் டே’) என்ற ஒரு நாளை உருவாக்கி அதில் மாணவர்களுக்கு விடைத்தாளை வழங்கி மறுமதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. 
 • இதன்மூலம் மறுமதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும், மாணவர்களுக்கு கட்டண செலவு குறையும் என்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment