அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியாமல் 412 ‘நீட்’ இலவச பயிற்சி மையங்கள் திணறல்


 • ‘நீட்’ தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த பயிற்சியை வழங்க முடியாமல் 412 இலவச பயிற்சி மையங்கள் திணறுகின்றன. 
 • நீட் தேர்வு பயிற்சி மையங்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவு செய்தது. 
 • அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டு ‘ஸ்பீடு’ என்ற நிறுவனம் மூலம் இந்த பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. நாட்டிலேயே முதல் முறையாக அரசு சார்பில் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது என்று பேசப்பட்டது. 
 • ஆனால் அப்போது(2018 மே மாதம்) நடத்தப்பட்ட நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்புகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களை தேடிக்கூட கண்டுறபிடிக்க முடியவில்லை. 
 • அந்த அளவுக்கு மாணவர்கள் யாரும் தேர்வாகவில்லை. அதன் தொடர்ச்சியாக 2018-ம் ஆண்டிலும் 412 பயிற்சி மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி மும்முரமாக வழங்கப்பட்டது. 
 • இதில் 19 ஆயிரத்து 355 மாணவர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்றனர். ஆனால் அவர்களிலும் யாரும் சோபிக்கவில்லை. 
 • விரல்விட்டு எண்ணும் அளவுக்கு அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து இருந்தனர். 
 • இந்த நிலையில் நடப்பாண்டுக்கான(2019-20) நீட் தேர்வு பயிற்சி இப்போது தொடங்குமா? எப்போது தொடங்குமோ? என்ற பெரிய ஆர்ப்பாட்டத்துக்கு மத்தியிலேயே இலவச பயிற்சி வகுப்புகள் காலாண்டு தேர்வு முடிந்த பிறகு(கடந்த செப்டம்பர் 24-ந்தேதி) தொடங்கியது. 
 • தனியார் பயிற்சி மையங்களில் பிளஸ்-1 படிக்கும் போதே மாணவர்கள் சேர்ந்து பயிற்சி பெறும் நிலையில், பிளஸ்-2 வகுப்பு தொடங்கி, 4 மாதங்கள் கழித்து தாமதமாகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கின. 
 • தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் தேர்வு இலவச பயிற்சி மையங்களில் ஆசிரியர்களை கொண்டு இந்த பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 
 • ஆசிரியர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ‘ஈடூஸ் இந்தியா’ என்ற நிறுவனம் முன்னதாக பயிற்சியை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 • கடந்த செப்டம்பர் மாதம் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருந்தாலும், இதுவரையில் வெறும் 30-க்கும் குறைவான வகுப்புகளே நடந்து இருப்பதாக கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. 
 • இப்படி இருக்க பொதுத்தேர்வு மாணவர்கள் எழுத உள்ளதால், நீட் தேர்வு பயிற்சி மையங்களில் தற்போது பயிற்சி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. 
 • தனியார் பயிற்சி மையங்கள் போட்டிப்போட்டு மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்கி வருகின்றனர். 
 • தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தனியார் பயிற்சி மையங்களின் மத்தியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊன்றுகோலை தரக்கூடிய நீட் தேர்வு இலவச பயிற்சி மையங்களில் ஆசிரியர்கள் பயிற்சியை வழங்க முடியாமல் திணறுகின்றன. 
 • இது ஒரு புறம் இருக்க, அமெரிக்கா நிறுவனத்துடன் நீட் தேர்வு இலவச பயிற்சி அளிப்பது குறித்து ஒரு வாரத்துக்குள் ஒப்பந்தம் போட இருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் 6-ந்தேதி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். 
 • இப்படியாக நீர் தேர்வு இலவச பயிற்சி குறித்த அறிவிப்பு வெறும் கானல் நீராகவே போய்விடுமோ? என்றும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் இடம் கிடைப்பது பகல் கனவாகவே போய்விடுமோ? என்றும் கல்வியாளர்கள் அச்சம் கொள்கின்றனர். 
 • இதற்கு அரசின் நடவடிக்கை தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment