அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அரையாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய சொந்த ஊரான கோபி குள்ளம்பாளையத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் வாக் காளர்களோடு வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்களித்த பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால்தான் அரசின் திட்டங்களை இணைந்து செயல்படுத்த முடியும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. அரசு தொலைநோக்கு சிந்தனையோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக தகவல் வந்துள்ளது. அதனால் பள்ளி நிர்வாகத்துக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவ-மாணவிகள் விடுமுறை நாட்களில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். பள்ளிக்கூடம் திறக்கும் நாளான வருகிற 3-ந் தேதி 3-ம் பருவ தேர்வு புத்தகங்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment