அரையாண்டு தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்: 3 மாவட்ட கல்வி அதிகாரிகள் போலீசில் புகார் தீவிர விசாரணை

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதன் இறுதி தேர்வு நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான தேர்வு வினாத்தாள்களில் சில வினாத்தாள் தேர்வு நடைபெறுவதற்கு முன்கூட்டியே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் செயலியான ‘ஷேர்சாட்’ மற்றும் ‘ஹலோ’ ஆகியவற்றில் வெளியாகின.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அங்கிருந்து வினாத்தாள் வெளியாகவில்லை என்பது தெரியவந்ததாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செல்போன் செயலியில் வெளியான வினாத்தாள்கள் நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளில் இருந்து தான் மற்ற பகுதிகளுக்கு பரவி இருப்பது முதற்கட்டமாக கண்டறியப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்த 3 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகள் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தனர். செல்போன் செயலியில் வினாத்தாளை பகிர்ந்து கொண்ட அனைவருடைய விவரங்களையும் பார்த்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதபடி, அடுத்த முறை மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ என்றனர்.

No comments:

Post a Comment