10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரையாண்டு தேர்வில் முன்கூட்டியே கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு விசாரணை நடத்த அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு

சமூக ஊடகங்களில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு அரையாண்டு தேர்வு கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி விசாரணை நடத்த அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான பல்வேறு கேள்வித் தாள்கள் சமூக ஊடகங்களில் வெளியானது. அதை பார்த்து மாணவ-மாணவிகள் வியப்பு அடைந்தனர். அதே நேரத்தில் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் வினாத்தாள்கள் சமூக ஊடகங்களில் பரவியது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி நடவடிக்கை மூலம், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான தாவரவியல், உயிரியல், பிளஸ்-1 வகுப்புக்கான கணக்குப்பதிவியல், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான சமூக அறிவியல் ஆகிய வினாத்தாள்கள் உடனடியாக மாற்றப்பட்டு, புதிய வினாத்தாள்கள் மூலம் நேற்று தேர்வுகள் நடந்தன. இந்த வினாத்தாள் கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் அரையாண்டு தேர்வுக்கான சில வினாத்தாள்கள் வெளியானதாக தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக விசாரித்தோம். மாவட்டத்தில் 19 வினாத்தாள் காப்பகங்கள் உள்ளன. அந்த வினாத்தாள் காப்பகங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தோம். அப்போது எந்த வினாத்தாள் காப்பகத்திலும் வினாத்தாள் கட்டுகள் எதுவும் பிரிக்கப்படவில்லை. அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் வெளியாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் சமூக ஊடகங்களில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்து உள்ளோம். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் வெளியானதாக தகவல் வந்த உடன், அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு புதிய வினாத்தாள் தயார் செய்யப்பட்டது. இதனால் புதிய வினாத்தாள் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. இதில் சில கேள்வித்தாள் தேர்வுக்கு முன்கூட்டியே வெளியானதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறுந்தகடு வடிவில் கேள்வித்தாள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் எப்படி கேள்வித்தாள் வெளியானது? என்று தெரியவில்லை. வெளியானதாக கூறப்பட்ட கேள்வித்தாள் மாற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு விசாரணை நடத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment