‘நீட்’ தேர்வு பயிற்சியில் முறைகேடு: தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரி விசாரணை

‘நீட்‘ தேர்வு பயிற்சியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரி விசாரணை நடத்தினார்.

மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு ‘நீட்‘ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு அரசு பள்ளி மாணவ- மாணவிகளை தயார்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நீட் தேர்வு சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு விடுமுறை நாட்களில் சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆன்-லைன் மூலமாகவும் திரைகளில் பாடங்கள் நடத்தப்பட்டன.

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் இங்கு நடைபெற்ற பயிற்சியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது, பயிற்சிக்கு ஆசிரியர்கள் வந்ததாக அவர்களது கையெழுத்திட்டு சம்பளம் வழங்கியதாகவும், அவ்வாறு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சுருட்டியதாகவும் கூறப்பட்டது.

இந்த முறைகேடு குறித்து கடையநல்லூர் பகுதியை சேர்ந்த பரசுராமன் என்பவர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை திரட்டி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஐகோர்ட்டு விரைந்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை (தொழிற்கல்வி) இணை இயக்குனர் சுகன்யா நேற்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கையெழுத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்த 6 ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடந்தது. காலையில் தொடங்கிய விசாரணை பிற்பகல் வரை நீடித்தது. இந்த விசாரணையின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment