பின்லாந்து நாட்டு கல்வி குழுவினர் சென்னை வருகை அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

கல்வி முறையில் முதன்மை இடத்தில் பின்லாந்து நாடு உள்ளது. அந்த நாட்டுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சமீபத்தில் பயணம் மேற்கொண்டார்.

அதன்பின்பு சென்னை திரும்பிய அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்து நாட்டு கல்வி குழுவினர் சென்னைக்கு வருகை தந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

அதன்படி பின்லாந்து நாட்டு கல்வி குழுவினர் சென்னைக்கு வந்து உள்ளனர். தமிழகத்தில் பள்ளிகளின் கற்பிக்கும் முறையை பார்வையிடும் அவர்கள் அதற்கேற்றபடி ஆலோசனைகளை வழங்குகின்றனர். அதற்கு முன்னோட்டமாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நேற்று சிறப்பு பயிற்சி அளித்தனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய அரசு பள்ளிகளில் இருந்து வந்திருந்த 120 ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் இருந்து வந்திருந்த கல்வி குழுவினர் 6 பேர் சிறப்பு பயிற்சி அளித்தனர். அப்போது பின்லாந்து நாட்டு கல்வியின் சிறப்பம்சங்கள் குறித்தும், அங்கு கற்பித்தல் முறை எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விரிவாக எடுத்துக்கூறினர்.

இதன் தொடர்ச்சியாக அரசு பள்ளி ஆசிரியர்கள் பின்லாந்து சென்று அங்குள்ள கற்பித்தல் முறைகளை நேரடியாக பார்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment