“தேர்வில் தோல்வி அடைந்தால் லேப்டாப் கிடையாது” அரசாணை வெளியீடு

தேர்வில் தோல்வி அடைந்தால் லேப்டாப் கிடையாது என்று அரசு ஆணை பிறப்பித்து இருக்கிறது.

பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது வரை அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிளஸ்-2 வகுப்பு முடித்திருந்த சிலருக்கு லேப்டாப் வழங்கும் பணியில் சிறு தொய்வு ஏற்பட்டது. லேப்டாப் உடனே வழங்கக்கோரி ஆங்காங்கே மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் லேப்டாப் வழங்கும் திட்டத்தில் சில வழிமுறைகளை அரசு கொண்டு வந்துள்ளது. அதுதொடர்பாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, 4 வகையான முன்னுரிமைகளின் கீழ் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் முதல் முன்னுரிமையாக 2019-20-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கும், 2-வதாக 2019-20-ம் கல்வியாண்டில் பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கும், 3-வதாக 2018-19-ம் ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கும், 4-வதாக 2017-18-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் முதல் 2 முன்னுரிமைகளில் உள்ள மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் வழங்கப்பட்டுவிட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது 3 மற்றும் 4-வது முன்னுரிமைகளின் கீழ் லேப்டாப் பெற இருப்பவர்களுக்கு பள்ளிக்கல்வி துறை சில வழிமுறைகளை பின்பற்ற முடிவு செய்துள்ளது. அதன் விவரங்கள் வருமாறு:-

* பாலிடெக்னிக் உள்பட தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க வேண்டும்.

* 3 மற்றும் 4-வது முன்னுரிமை பட்டியல்களில் இருக்கும் மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்திருந்தாலோ, படிப்பை தொடராமல் இருந்தாலோ அவர்களுக்கு லேப்டாப் வழங்க தேவையில்லை.

* இதன் அடிப்படையில் தான் இனி லேப்டாப் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment