சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தீவிபத்து

ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை சார்ந்த இயக்குநரகங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இயங்கி வருகின்றன. இதில் 11 மாடி கட்டிடமான ஈவிகேஎஸ் சம்பத் மாளிகையில் தமிழக பாடநூல் கழகம் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அலுவலகங்கள் உள்ளன. 6-வது தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சொந்தமான அறையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைப் பார்த்த ஊழியர்கள் உடனே அருகில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவலறிந்து தேனாம்பேட்டையில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தில் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பழைய விடைத்தாள்கள், எழுதுபொருட்கள் முழுவதுமாக எரிந்துவிட்டன. சேத மதிப்பு 4 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா கூறும்போது, ‘‘மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. அந்த அறையில் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் ஏதுமில்லை. வெறும் எழுது பொருட்கள் மற்றும் காகிதங்கள் மட்டுமே இருந்தன’’என்றார்.

No comments:

Post a Comment