வாக்களிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பள்ளிகளில் தேர்தல் விழிப்புணர்வு மன்றம்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதமாக தங்கள் பெயர், விலாசம் போன்ற விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்பதை வாக்காளர்களே பட்டியலை பார்த்து திருத்திக்கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள சுமார் 6 கோடி வாக்காளர்களில் 99.4 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சரிபார்த்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு டிசம்பர் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ‘தேர்தல் விழிப்புணர்வு மன்றம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 18 வயது முடிந்ததும் வாக்காளர் அடையாள அட்டையை அங்கு பெறலாம்.

தேர்தல் விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். மாதத்திற்கு ஒரு மணி நேரம் என்று 4 மாதம் சிறப்பு வகுப்புகள் நடைபெறும். இதற்காக நியமிக்கப்பட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கோட்டாட்சியர்கள் என 8 பேர் அடங்கிய குழுவினர் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர் தலைவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு பயிற்சி அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment