ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது மத்திய அரசு அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட துறைக்கு ஆற்றிய பங்களிப்பு, சேவையை அங்கீகரிக்கும் வகையில், கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச பட விழாவில் அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.
இந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவுக்கு பொன் விழா ஆண்டு ஆகும். இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவை இந்தியாவும், ரஷியாவும் இணைந்து நடத்துகின்றன.

இந்த விழாவில் 76 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில் 24 படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் ஆகும். 50 பெண் இயக் குனர்களின் சிறந்த 50 படங்களும் திரையிடப்பட உள்ளது.

இந்திய பிரிவில் 26 திரைப்படங்களும், 15 ஆவணப் படங்களும் திரையிடப்படும். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான சிறந்த 7 அல்லது 8 படங்களும் திரையிடப்பட இருக்கின்றன.

10 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

சர்வதேச திரைப்பட விழாவின் பொன் விழா ஆண்டையொட்டி, சினிமா துறைக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில், அவருக்கு சிறப்பு விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில் கூறி இருப்பதாவது:-

இந்திய திரைப்பட துறைக்கு கடந்த பல ஆண்டுகளாக ரஜினிகாந்த் செய்து வரும் தன்னிகரற்ற பங்களிப்பையும், சேவையையும் கவுரவித்து அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு, கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட பொன்விழா ஆண்டையொட்டி ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை அவருக்கு அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு அதில் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

கோவாவில் நடைபெறும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இதேபோல் பிரான்ஸ் நடிகை இசபெல்லா ஹூப்பர்ட்டுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப் படுவதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்து உள்ளார்.

120 படங்களில் நடித்துள்ள இசபெல்லா ஹூப்பர்ட் கோல்டன் குளோப் விருதும், 102 சர்வதேச விருதுகளும் பெற்று உள்ளார். ஒரு முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார்.

சர்வதேச பட விழாவின் வழிகாட்டும் குழுவின் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருப்பதாகவும், இதில் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்தும் கலந்து கொள்வார் என்றும், விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.

மத்திய அரசின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் கடந்த 1975-ம் ஆண்டு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து உள்ளார். ‘பிளட் ஸ்டோன்’ என்ற ஆங்கில படத்திலும் நடித்து இருக்கிறார்.

மத்திய அரசு ஏற்கனவே இவருக்கு பத்ம பூஷண் விருதும், பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. இது தவிர ஏராளமான விருதுகளையும் பெற்று உள்ளார்.

ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்குவதாக மத்திய அரசு இப்போது அறிவித்து இருப்பதை பல்வேறு தரப்பினரும் வரவேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:-

கோவாவில் நடைபெற உள்ள 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் திரைப்பட துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற இருப்பது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது. இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகிற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து இருக்கிறது. ரஜினிகாந்த் தமிழ்ப் படத்தில் அறிமுகமாகி தனது தனித்திறமையால் ரசிகர்கள் மத்தியில் தனி முத்திரை பதித்தவர். நடிப்பில் மட்டுமல்ல சமூக அக்கறை கொண்டவராக, மனித நேயம் மிக்கவராக, ஆன்மீகவாதியாக செயல்படுகிறார்.

விருதுக்கு தேர்வான ரஜினிகாந்துக்கு த.மா.கா சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் பாராட்டுகளையும், மனம் நிறைந்த நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கான அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தின் தலை சிறந்த நடிகரும், உலகளவில் இத்துறையில் புகழ் பெற்றவருமான நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசாங்கம் வழங்குவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ரஜினிகாந்துக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

உலகளவில் புகழ்பெற்று பல நாட்டு தலைவர்கள், இந்தியாவின் பிற அரசியல் கட்சி தலைவர்கள், முதல்வர்கள், பிரதமர் உள்ளிட்ட அனைவரிடமும் நல்ல நட்பும், பழக்கமும் கொண்டிருந்தாலும், தன்னை இந்த அளவிற்கு உயர்த்தி விட்ட தனது ரசிக பெருமக்களை நன்றி மறவாமல் மனதில் கொண்டாடும் அவரது பண்பு அவரது குணத்தின் உச்சம்.

இவ்விருதுக்கு பரிந்துரை செய்த மத்திய அரசுக்கும், குறிப்பாக இத்துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு தமிழனாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment