5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு

5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருந்தாலும், பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

மாணவர்களின் கற்றல் திறனை அறிந்துகொள்வதற்காகவே இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது என்று பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்புகள் வந்த போதிலும், 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடர்பான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதம் 30-ந்தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 17-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 30-ந்தேதி - தமிழ், ஏப்ரல் 2-ந்தேதி - ஆங்கிலம், 8-ந்தேதி - கணிதம், 15-ந்தேதி - அறிவியல், 17-ந்தேதி - சமூக அறிவியல் தேர்வு நடைபெற உள்ளது.

5-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கி 20-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15-ந்தேதி - தமிழ், 17-ந்தேதி - ஆங்கிலம், 20-ந்தேதி - கணிதம் தேர்வு நடக்கிறது.

ஒவ்வொரு தேர்வும் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.15 மணி வரை நடைபெறுகிறது. இதில் முதல் 15 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்கும், விடைத்தாளில் சுயவிவரங்களை குறிப்பிடுவதற்கும் நேரம் ஒதுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment