மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்களில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருந்தது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

அந்தமான் அருகே உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், இன்று (புதன்கிழமை) புயலாகவும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

தற்போது இது வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக்கடற்கரை நோக்கி நகரக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 4 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 2 செ.மீ., பேராவூரணி மற்றும் அரிமலத்தில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே மீனவர்கள் இந்த 2 நாட்களும் கடலுக்கு செல்ல வேண்டாம். அக்டோபர் 1-ந்தேதி முதல் தற்போது வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 22 செ.மீ. இயல்பாக மழை பெய்ய வேண்டும். தற்போது 23 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 8 சதவீதம் அதிகமாகும். வரும் 2 நாட்களில் தமிழகத்தில் குறிப்பிடும் அளவுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment