பாரத் உயர்கல்வி-ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் அஞ்சலகங்களில் விற்பனை மாணவர்களுக்கு ரூ.20 கோடி கல்வி உதவித்தொகையும் அறிவிப்பு

பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவம் அஞ்சலகங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ரூ.20 கோடி கல்வி உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக்கழகமான பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர, பொறியியல் பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பப் படிவம், சுலபமாக பெறுவதற்கு வசதியாக அனைத்து அஞ்சலகங்களிலும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சேலையூரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் தாம்பரம் அஞ்சலக பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் எஸ்.வி.சுந்தரி தொடங்கிவைத்தார்.

பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜெ.சந்தீப் ஆனந்த், துணை வேந்தர் வி.கனகசபை, இணை துணை வேந்தர் ஆர்.எம்.சுரேஷ், கூடுதல் பதிவாளர் ஆர்.ஹரிபிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விண்ணப்ப படிவத்திற்கு தபால் நிலையங்களில் ரூ.1,200 ரொக்கமாக பணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை ஆராய்ந்து தகுதியின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடைபெறவுள்ள பி.இ.இ.இ.-2020 நுழைவுத்தேர்வுக்கு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., “பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பல்வேறு திட்டத்தின் கீழ் ரூ.20 கோடிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த கல்வித்தொகை வழங்கப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அறிவித்தார்.

இந்த கல்வி உதவித்தொகையை பெற பிளஸ்-2 அரசுத் தேர்விலும், பி.இ.இ.இ.-2020 நுழைவுத்தேர்விலும் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment