மாநில கல்வி வாரியங்களை ஒழுங்குமுறைப்படுத்த தேசிய அமைப்பு தேசிய கல்வி கொள்கையில் தகவல்

மத்திய அரசு இதுவரை எந்த மாநில கல்வி வாரியங்களையும் மேற்பார்வையிட்டது இல்லை. மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மட்டுமே மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்துவருகிறது. மாநில கல்வி வாரியங்கள் அந்தந்த மாநில அரசுகளால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இதில் மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு ஒப்படைத்துள்ள இறுதி வரைவு தேசிய கல்வி கொள்கையில் இதுபற்றி கூறியிருப்ப தாவது:-

இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி வாரியங்களும் 21-ம் நூற்றாண்டுக்கான திறன் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் அதன் மதிப்பீடு முறைகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதற்காக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்கல்வி வாரியங்களுக்காக மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் தேசிய அளவில் ஒரு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

மாதக்கணக்கில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்வது, மனப்பாடம் செய்வது போன்றவைகள் இல்லாமல் மாணவர்களின் முக்கிய திறன்களை சோதிப்பதை முதன்மையாக கொண்டு பள்ளிக்கல்வி வாரிய தேர்வுகள் எளிமையாக்கப்படும். இதன்மூலம் பள்ளிக்கு சென்று வகுப்பில் அடிப்படை முயற்சிகளை எடுக்கும் சாதாரண மாணவர்கூட கூடுதல் முயற்சிகள் எதுவும் இல்லாமல் பாடத்தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment