அரசு பள்ளிகளில் யோகா கற்றுத்தர பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் களுக்கு யோகா கற்றுத்தர மும்பை ‘கைவல்யதாமா’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 2 நாள் சுற்றுப்பயணமாக மகாராஷ்டிர மாநிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது, மும்பையில் உள்ள பிரபல யோகா பயிற்சி அமைப்பான ‘கைவல்யதாமா’ நிறுவனத்தை செங்கோட்டையன் பார்வையிட்டார். தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் யோகா மற்றும் மனவளக் கலைகளை பயிற்றுவிப்பதற்காக ‘கைவல்யதாமா’ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த ‘கைவல்யதாமா’ நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு யோகா, பிராணாயாமம் மற்றும் மனவளக் கலைகளை கற்றுத்தர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாணவர்கள் தங்கள் மனநலம், உடல்நலத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும். கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல துறைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

இவ்வாறு செங்கோட்டையன் கூறினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment