நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா, ஆயுர்வேதா படிப்புகளில் சேர்க்கக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களை சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்பில் சேர்க்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவன் நவீன்பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

காலி இடங்கள்

சிறுவயதில் இருந்தே ஆயுர்வேத டாக்டராக ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் படித்தேன். நடப்பு கல்வியாண்டில் நடத்தப்பட்ட ‘நீட்‘ தேர்வை எழுதினேன். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை விட குறைவான மதிப்பெண் பெற்றேன்.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட கல்லூரிகளில் மொத்தம் 394 நிர்வாக இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 555 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடம் ஒதுக்கப்பட்டாலும், வெறும் 116 பேர் மட்டுமே நிர்வாக இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 278 இடங்களில் மாணவர்கள் சேராததால், அவை காலியாக உள்ளன.

நிரப்ப வேண்டும்

கடந்த 2018-19 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த படிப்புகளுக்கு நடப்பு ஆண்டு முதல் தான் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்ற விதி நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆனால், ‘நீட்’ தேர்வில் ‘கட்-ஆப்’ மதிப்பெண் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், என்னை போன்ற மாணவர்கள் இந்த படிப்பில் சேர முடியவில்லை. பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல், அதிக இடங்கள் காலியாக உள்ளதால், ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளதால், அந்த இடங்கள் எல்லாம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக, நீட் தேர்வில் ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை விட குறைவாக மதிப்பெண் எடுத்துள்ள என்னை போன்ற மாணவர்களை கொண்டு, காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்பவேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டு மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டு அண்மையில் தீர்ப்பு அளித்துள்ளது.

அரசுகளுக்கு நோட்டீஸ்

அதுபோல, சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட ‘கட்-ஆப்’ மதிப்பெண்ணை குறைக்கவேண்டும். குறைவாக மதிப்பெண் எடுத்த என்னை போன்ற மாணவர்களை இந்த படிப்பில் சேர்க்கவேண்டும். இந்த படிப்பில் சேருவதற்கு கடைசி நாளாக வருகிற நவம்பர் 15-ந்தேதி என்று நிர்ணயிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை கடிதம் கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

எனவே, நீட் தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்த என்னை போன்ற மாணவர்களை, தமிழகத்தில் காலியாக உள்ள சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புக்கான இடங்களில் சேர்த்துக்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment