மாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியர் கைது

கடலூரில் மாணவரை சரமாரியாக அடித்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டையை சேர்ந்த அழகானந்தம் என்பவரது மகன் தினேஷ்(வயது 18). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறார். இவர் கடந்த ஆண்டு அதே கல்லூரி வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து முடித்திருந்தார்.

அவருடன் படித்த மாணவர்களுக்கு இந்த ஆண்டில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தினேஷ் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கவில்லை. அதனால் தினேஷ் தன்னுடன் படித்த சக மாணவர்கள் சிலருடன் பள்ளிக்கூடத்துக்கு சென்று தங்களுக்கு மடிக்கணினி எப்போது கிடைக்கும் என்று ஆசிரியர்களிடம் கேட்டு உள்ளார். அதற்கு ஆசிரியர்கள், மடிக்கணினி வந்ததும் தருகிறோம் என்று கூறி உள்ளனர்.

அதனால் அந்த மாணவர்கள் திரும்பி செல்லும் போது உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன், திடீரென மாணவர் தினேசை அழைத்து சரமாரியாக அடித்துள்ளார். இதனை தினேசுடன் வந்த மாணவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதற்கிடையில் உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதில் காயமடைந்த மாணவர் தினேஷ் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவரின் தாயார் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகனை கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடற்கல்வி ஆசிரியரை விடுவிக்கக்கோரியும் பள்ளி முதல்வரும், சக ஆசிரியர்களும் இரவு 8 மணி அளவில் பள்ளி முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment