ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை வீடு, வாகனக் கடன் வட்டி குறையும்

ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இதனால் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருமாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை கூட்டத்தை நடத்துவது வழக்கம். அதில் வட்டி விகிதம் மற்றும் நிதிக் கொள்கை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற இந்த ஆண்டின் நான்காவது நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை மேலும் 25 புள்ளிகள் குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த வருட ஆரம்பத்தில் பிப்ரவரி மாதம் ரெப்போ விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டது. ஏப்ரல், ஜூன் மாதங்களில் நடைபெற்ற நிதிக் கொள்கை கூட்டத்தில் ரெப்போ விகிதம் தலா 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதக் கூட்டத்தில் அதிகபட்ச அளவாக 35 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய கூட்டத்தில் 35 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெப்போ விகிதம் 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரையில் ரெப்போ விகிதம் 135 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி, ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி வாங்கும் கடனுக்கான வட்டி ரிவர்ஸ் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. இந்த வட்டி விகித குறைப்பால் வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வீடு, வாகனக் கடன் போன்றவற்றின் வட்டியைக் குறைக்க வாய்ப்பிருப்பதால், மாதத் தவணை செலுத்துபவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. மக்களின் நுகர்வு கடுமையான அளவில் குறைந்துள்ளது. இதன் விளைவாக உற்பத்தியும் சரிந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவின் வளர்ச்சி வீதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது. இதன் பொருட்டு மத்திய அரசு சில பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்ற மாதம் நிறுவனங்களுக்கான நிறுவன வரியை 10 சதவீத அளவில் குறைத்தது. ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து ரெப்போ விகிதத்தை குறைத்து வருகிறது.

No comments:

Post a Comment