பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

நிலவேம்பு கசாயம்

டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை தாமதமின்றி அகற்றவேண்டும். பள்ளிகளில் வழக்கமாக சுத்தம் செய்யப்படும் விவரம் அடங்கிய அறிக்கை மாவட்ட கலெக்டர்களுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

* பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் சுத்தம் செய்யும் நிகழ்வு நடத்த வேண்டும்.

விழிப்புணர்வு

* தூய்மை குறித்து மாணவர்களிடையே உணர்த்துவதோடு, பள்ளிகளில் தூய்மைக்காக தூதுவர்களையும் நியமிக்கவேண்டும். 9-ம் வகுப்பு மற்றும் உயர் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களிடையே சுகாதார ஊழியர்களின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் தண்ணீர் தேங்காத சூழல், தேங்காய் ஓடுகள், பயன்பாடற்ற கழிவு பொருட்கள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

* பள்ளி குழந்தைகள் 5 நாட்களோ அல்லது அதற்கு மேலோ தொடர்ச்சியாக காய்ச்சலால் அவதிப்பட்டால் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்த வேண்டும்.

நடவடிக்கைகள்

* டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா மற்றும் வைரல் காய்ச்சல் தொடர்பான தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் காலை நேர இறை வாழ்த்து நிகழ்ச்சியில் தெரிவிக்கவேண்டும்.

இந்த அறிவுறுத்தல்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்குள் பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment