தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அரசாணை வெளியீடு

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் 27-ந் தேதிக்கு, அடுத்த நாளும் அரசு விடுமுறை விடப்படுகிறது என்று அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் அரசு விடுமுறை வருவதால், மக்களிடம், குறிப்பாக அரசு ஊழியர் களிடம் சற்று சோர்வு காணப்பட்டது.

25-ந் தேதி (வெள்ளிக் கிழமை) வெளியூர்களுக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடிவிட்டு, 2 நாட்களிலேயே உடனடியாக பணிக்கு திரும்புவதில் மக்களிடையே மகிழ்ச்சி சற்று குறைவாக இருந்தது.

ஆனால் அந்த சோர்வை மாற்றும் வகையில் அரசாணை ஒன்றை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. பொதுத் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ப.செந்தில்குமார் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

27-ந் தேதியன்று தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்வுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக 28-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.

அந்த கோரிக்கைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, தீபாவளிக்கு அடுத்த நாள் 28-ந் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9-ந் தேதியன்று (2-ம் சனிக் கிழமை) பணிநாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது.

இது செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவல்களைக் கவனிக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருவூலம், சார்நிலைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்பட தகுந்த ஏற்பாட்டை செய்யும்படி மாவட்ட கலெக்டர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment