உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமனம்

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே (63) நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 18-ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இப்போது தலைமை நீதிபதியாக இருந்து வரும் ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் நவம்பர் 17-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதை மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அறிவித்தது. நவம்பர் 18-ம் தேதியன்று புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்க உள்ளார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி வரை அவர் அப்பதவியில் நீடிப்பார். 1956-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்த எஸ்.ஏ.பாப்டே, புகழ்பற்ற மூத்த வழக்கறிஞர் அரவிந்த் நிவாஸ் பாப்டேயின் மகன். சட்டம் படித்த எஸ்.ஏ.பாப்டே 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியானார். அயோத்தி வழக்கு, கிரிக்கெட் வாரிய வழக்கு உள்ளிட்டவற்றை விசாரித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு 40 நாள் தொடர் விசாரணைக்குப் பிறகு சமீபத்தில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. இப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17-ம் தேதி பதவி ஓய்வு பெறும் நிலையில், அயோத்தி வழக்கு, சபரிமலையில் பெண்கள் தரிசனத்துக்கு அனுமதியை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு, மத்திய அரசின் நிதிச் சட்டத்தை எதிர்த்த வழக்கு ஆகியவற்றில் அவர் முக்கிய தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment