பதுக்கல் தங்கத்தை கணக்கு காட்டி வெளியே வர பொது மன்னிப்பு திட்டம், பரிசீலனையில் இல்லை மத்திய அரசு திட்டவட்டம்

பதுக்கல் தங்கத்தை கணக்கு காட்டி வெளியேவர பொது மன்னிப்பு திட்டம் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கருப்பு பணத்தை அடியோடு ஒழித்துக்கட்ட பிரதமர் மோடி அதிரடியாக 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ந்தேதி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார்.

இதன்மூலம் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அந்த நோட்டுகளை இருப்பு வைத்திருந்தவர்கள் வங்கியில் செலுத்தி மாற்றிக்கொள்ள குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் தரப்பட்டது.

இதில் 99.3 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன.

இதேபோன்று கருப்பு பண முதலைகள் பலரும் தங்கத்தையும் வாங்கி பதுக்கி வைத்துள்ளனர். உரிய ரசீது இன்றி வாங்கி, வருமான வரி கணக்கில் காட்டாமல் இந்த தங்கத்தை அவர்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்.

நமது நாட்டில் பொதுமக்கள் கைகளில் 20 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது.

ஆனால், பதுக்கல் தங்கம், கணக்கில் காட்டாத இறக்குமதி தங்கம், மூதாதையர் வழி குடும்பத்துக்கு வந்த தங்கம் போன்றவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் சுமார் 30 ஆயிரம் டன்கள் வரை பொதுமக்களிடம் இருக் கலாம் என கருதப்படுகிறது.

இந்த நிலையில் கணக்கில் காட்டப்படாத பதுக்கல் தங்கத்தை வெளியே கொண்டு வர, பொது மன்னிப்பு திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது; இதன்படி பதுக்கல் தங்கத்தை தாமாக முன்வந்து அறிவித்து, அதற்கான வரியை செலுத்தி, பதுக்கல் தங்கத்தை ‘சுத்த தங்கமாக’ மாற்றி, வெளியே வந்து விடலாம். சட்ட நடவடிக்கையில் இருந்து இதன் மூலம் தப்பி விடலாம் என தகவல்கள் வெளிவந்தன.

அதுமட்டுமின்றி, ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம், சொத்துகளை கணக்கில் கொண்டுவர ஏதுவாக அபராதமும், வரியும் செலுத்தி, வழக்கின்றி தப்பிக்க ‘பிரதம மந்திரி காரிப் கல்யாண் யோஜனா’ திட்டம் வழிவகுத்தது. ஆனால் இந்த திட்டம் தராத வெற்றியை, தங்க பொது மன்னிப்பு திட்டத்தின் மூலம் அடைவதற்கு மத்திய அரசு முயற்சிக்கும் எனவும் தகவல்கள் வெளிவந்தன.

இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு சென்றது. உடனே மத்திய அரசு வட்டாரங்கள் இது தொடர்பாக நேற்று ஒரு விளக்கம் அளித்தன.

கணக்கில் காட்டாத பதுக்கல் தங்கத்தை கணக் கில் கொண்டு வருவதற்காக தங்க பொது மன்னிப்பு திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி அந்த வட்டாரங்கள் மேலும் கூறுகையில், “அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன. அப்படிப்பட்ட சூழலில் இப்படிப்பட்ட ஊக தகவல்கள் வெளியாவது வழக்கமான ஒன்றுதான்” என தெரிவித்தன.

No comments:

Post a Comment