உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

Sunday, October 20, 2019

மாமல்லபுரம் கடற்கரை குறித்து மோடி எழுதிய உருக்கமான கவிதை

மாமல்லபுரம் கடற்கரை குறித்து மோடி எழுதிய உருக்கமான கவிதை

மாமல்லபுரம் கடற்கரை குறித்து பிரதமர் நரேந்திர மோடி “வாழ்வின் பேரழகு நீ” என்று உருக்கமான கவிதை எழுதி உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 11 மற்றும் 12-ந்தேதிகளில் சந்தித்து பேசினர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பின்போது, 12-ந்தேதி காலையில் பிரதமர் மோடி மாமல்லபுரம் அருகே உள்ள கோவளம் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது தனது சிந்தையில் உதித்ததை பிரதமர் மோடி கவிதையாக எழுதி உள்ளார்.

“சில நாட்களுக்கு முன்பு அழகிய மாமல்லபுரம் கடற்கரையில் இருந்தபோது நான் எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு” என்ற தலைப்பில் பிரதமர் மோடி டுவிட்டரில் அந்த கவிதையை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் எழில் கொஞ்சும் மாமல்லபுரம் கடற்கரையின் தன்மையை அவர் உருக்கமாக பிரதிபலித்துள்ளார்.

அந்தக் கவிதை வருமாறு:-

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

அளப்பரிய, முடிவற்ற,

ஒப்பில்லாத, வர்ணனைகளைக்

கடந்த, நீலக்கடலே

உலகிற்கு உயிரளிக்கும் நீ

பொறுமையின் இலக்கணம்

ஆழத்தின் உறைவிடம்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

வெளித்தோற்றத்திற்கு

கோபமாய், வீரத்துடன்

பேரிரைச்சலோடு எழும் அலைகள்

உன் வலியா? வேதனையா?

துயரமா? எதன் வெளிப்பாடு?

இருந்தபோதிலும் உன்னை

கலக்கமின்றி, தடுமாற்றமின்றி

உறுதியுடன் நிற்கச் செய்கிறது

உன் ஆழம்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

உன்னிடம் உள்ளது

எல்லையில்லாத வலிமை

முடிவில்லாத சக்தி ஆனாலும்

பணிதலின் பெருமையை

நிமிடந்தோறும் நவில்கிறாய் நீ

கரையை கடக்காமல்

கண்ணியத்தை இழக்காமல்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

கல்வித் தந்தையாய்,

ஞான குருவாய்

வாழ்க்கைப் பாடத்தை

போதிக்கிறாய் நீ

புகழுக்கு ஏங்காத,

புகலிடத்தை நாடாத,

பலனை எதிர்நோக்காத

உன் பயணம் தரும் பாடங்கள் ஏராளம்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

நிற்காமல், சளைக்காமல்

வீசும் உன் பேரலைகள்

‘முன்னேறுவதே வாழ்க்கை’ என்ற

உபதேச மந்திரத்தை உணர்த்தும்

முடிவில்லாத பயணமே

முழுமையான உன் போதனை.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

விழும் அலைகளிலிருந்து

மீண்டும் எழும் அலைகள்

மறைந்து

மீண்டும் தொடங்கும் உதயம்.

பிறப்பு-இறப்பு என்பது தொடர் வட்டம்.

உனக்குள் மடிந்து- பின்

உயிர்த்தெழும் அலைகள்

மறுபிறப்பின்

உணர்வூட்டம்.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

பழம்பெரும் உறவான

சூரியனால் புடமிட்ட

தன்னையழித்து,

விண்ணைத் தொட்டு,

கதிரவனை முத்தமிட்டு,

மழையாய் பொழிந்து

நீர்நிலைகளாய், சோலைகளாய்

மகிழ்ச்சி மணம் பரப்பி

படைப்பை அலங்கரித்து-எல்லோருக்கும்

வாழ்வளிக்கும் நீர் நீ.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

வாழ்வின் பேரழகு நீ

விஷத்தை அடக்கிய

நீலகண்டன் போல்- நீயும்

எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு

புது வாழ்வைப்

பிறர்க்களித்து

சொல்கிறாய்

சிறந்த வாழ்வின்

மறைபொருளை.

அலைகடலே!

அடியேனின் வணக்கம்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment