ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்வு

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்திய அரசு அலுவலக குறிப்பாணையில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2019 முதல் அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தி அனுமதித்துள்ளது. மத்திய அரசின் முடிவை பின்பற்றி மாநில அரசு ஓய்வூதியதாரர் கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2019 முதல் 17 சதவீத அகவிலைப்படி தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் தவணை அகவிலைப்படியானது 1.7.2019 முதற்கொண்டு ரொக்கமாக வழங்கப்படும்.

மாநில கணக்காய்வு தலைவரிடம் இருந்து முறையான அனுமதி பெறும் வரை காத்திருக்காமல் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி, கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொதுத்துறை வங்கிகள் உடனடியாக திருத்தப்பட்ட அகவிலைப்படியை வழங்கலாம்.

அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவிபெறும் உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், பொதுத்துறை-தன்னாட்சி நிறுவனம் உள்ளிட்டவற்றில் ஒட்டுமொத்த தொகை பெற்ற ஓய்வூதியத்தை தொகுத்து பெறும் தொகையில், தொகையை திரும்பப்பெறும் தகுதியுள்ள மற்றும் திருத்தப்பட்ட வீதத்தில் திரும்பப்பெறும் தொகை பெற தகுதியுள்ள மாநில அரசு பணியாளர்கள்,

1.11.1956 அன்று, தமிழ்நாடு மாநிலத்துக்கு மாற்றப்பட்ட பகுதிகளில் அதாவது கன்னியாகுமரி மாவட்டம், நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள கருவூலங்களின் அதேநாளில் ஓய்வூதியம் பெறுகிற முந்தைய திருவாங்கூர்- கொச்சி மாநில ஓய்வூதியதாரர்கள், தமிழ்நாடு சிறப்பு ஓய்வூதிய விதிகளின் கீழ் சிறப்பு ஓய்வூதியம் மற்றும் கருணைப்படி பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த ஆணை பொருந்தும்.

தற்போதைய மற்றும் எதிர் கால குடும்ப ஓய்வூதியர்கள், பகிர்வு முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களை பொறுத்தவரையில் அகவிலைப்படி விகிதாச்சாரத்துக்கு ஏற்ப பிரிக்கப்படலாம்.

கருணைத்தொகை பெறும் மாநில அரசு மற்றும் முன்னாள் மாவட்ட வாரியத்தின் வருங்கால வைப்புநிதிக்கு தொகை செலுத்திய, ஓய்வூதியம் இல்லாத பணியாளரமைப்பை சேர்ந்த பயனாளிகளான இறந்துவிட்ட பணியாளர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கு அகவிலைப்படி அளிப்பது குறித்த ஆணைகள் தனியாக வெளியிடப்படும்.

இந்த ஆணையில் அக விலைப்படி அனுமதித்ததின் காரணமாக அதிகரித்துவிட்ட செலவினம், 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் விதிக்கப்பட்ட விதி முறைகளுக்கிணங்க அடுத்து வரும் மாநிலங்களுக்கு இடையே பிரித்துக்கொள்ளத்தக்கது ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment