பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான 4 கல்லூரிகளுக்கு முதல்வர்களை தேர்வு செய்ய நீதிபதி நியமனம் ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில், ஆர்.நடராஜன் உள்பட பலர் தாக்கல் செய்த மனுவில், “சென்னை பச்சையப்பா கல்லூரி முதல்வராக டாக்டர் என்.சேட்டு என்பவர் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த நியமனம் முறையாக நடைபெறவில்லை. எனவே அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த ஏப்ரல் மாதம் பிறப்பித்த உத்தரவில், ‘விதிகளை பின்பற்றாமல் கல்லூரி முதல்வர் நியமனம் நடந்துள்ளதால் அது செல்லாது.’ என்று நீதிபதி கூறி இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சேட்டு மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கல்லூரி முதல்வர் நியமனம் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறவில்லை என்பதால் அது செல்லாது என ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். மேலும், பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில், 4 கல்லூரிகளுக்கு தகுதியானவர்களை முதல்வர்களாக தேர்வு செய்து நியமிக்க வேண்டியது உள்ளது. எனவே, இந்த 4 கல்லூரிகளுக்கும் முதல்வர்களை தேர்வு செய்ய ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமாரை நியமிக்கிறோம். மேலும், கல்லூரி முதல்வர்களின் நியமனத்தில் பெரும் தொகை லஞ்சம் கேட்கப்படுவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவையும் உறுதி செய்கிறோம்

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment