உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

TNPSC குரூப்-2 தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் பேட்டி

குரூப்-2 தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் கூறினார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி. எஸ்.சி.) செயலாளர் நந்தகுமார், சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத் தும் குரூப்-2 தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய தேர்வு முறையால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு நன்மை தான் ஏற்படும்.

கிராமப்புற மாணவர்கள் எந்த வகையிலும் புதிய தேர்வு முறையால் பாதிக்கப்பட மாட்டார்கள். கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி 6-ம் வகுப்பு முதல் படித்த பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கும் வகை யில் புதிய தேர்வுக்கான கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி தேர்வில் விடைகளை தேர்ந்தெடுத்து எழுதும் நடைமுறை ஏற்கனவே இருந்து வந்தது. இது நீக்கப்பட்டு விரிவாக, விளக்கமாக விடைகள் எழுதும் வகையில் தமிழ் மொழி தேர்வு முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய தேர்வு முறையால் தமிழ் எழுத, படிக்க தெரியாதவர்களால் குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற முடியாது. குரூப்-2 தேர்வில் திருக்குறளுக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சமூகத்தின் வரலாறு, அகழ்வாராய்ச்சிகளின் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் தொட்டு தற்காலம் வரையிலான தமிழ் இலக்கியம், சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு, 19-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரையிலான தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்த பகுதிகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சமூகநீதி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றின் அடிப்படை கொள்கைகள், சமூக நல்லிணக்கம், தமிழகத்தின் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் போன்ற தமிழகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் தேர்வு எழுத தயாராவதற்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை. இதுவரை அதுபோன்று நடந்தது இல்லை.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் கேள்விகள் தயாரிப்பது ரகசியமாக மேற்கொள்ளப்படும். கேள்விகள் அச்சிடப்பட்டு கவரில் வைத்து சீல் வைக்கப்பட்ட பின்னர், தேர்வு அறையில் அதனை பிரிக்கும் போது தான் கேள்விகள் தவறாக உள்ளனவா? என்பது தெரிய வரும்.

குரூப்-4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் தவறு இருந்தது குறித்து வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தகுழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

கடந்த ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தேர்வு மூலம் 17,500 பேர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சாதனை, இதுவரை வரலாற்றில் இல்லாத ஒன்றாகும்.

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் அடுத்த ஆண்டிற்கான தேர்வுக்கால அட்டவணை இன்னும் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment