அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தை தடுக்கும் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தை தடுக்கும் அரசாணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பணி வரைமுறை கோரி வழக்கு

அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியை வரைமுறைப்படுத்தி, உரிய ஊதியம் மற்றும் பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து மனுதாரர்கள் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரி செய்யப்படும் வரை புதிதாக ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது. அதை மீறும் நடவடிக்கைகளை அரசு அனுமதிக்கக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது.

அரசாணை

இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், ‘1991-92-ம் கல்வி ஆண்டுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் உள்ள பணியிடங்களில் எது குறைவாக உள்ளதோ, அதற்கு ஏற்ப சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணியாளர்களை நிர்ணயிக்க வேண்டும். உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதன் மூலம் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படக்கூடாது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சரி செய்யப்படும் வரை புதிய ஆசிரியர்கள் நியமிக்கக்கூடாது. இதை மீறி ஆசிரியர்களை நியமித்தால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கக்கூடாது” என கூறப்பட்டிருந்தது.

நிறுத்தி வைப்பு

இந்தநிலையில் அந்த மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அரசாணை குறித்து நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், புதிதாக ஆசிரியர் நியமிப்பதை தடுக்கும் வகையில் கடந்த 17-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment