ரெயில்வே போட்டி தேர்வுகளை தமிழில் நடத்தலாம் ரெயில்வே வாரியம் அதிரடி உத்தரவு

ரெயில்வே போட்டி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் நடத்தலாம் என்று ரெயில்வே வாரியம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

எதிர்ப்பு

ரெயில்வேயில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவை இல்லை என்றும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தினால் போதும் என்றும் ரெயில்வே வாரியம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கும், ரெயில்வே வாரியத்துக்கும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். இதேபோல ரெயில்வே வாரியத்துக்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு குரல் வலுத்தது. இந்தநிலையில் ரெயில்வே வாரியம் போட்டி தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என்று அறிவித்துள்ளது.

ரெயில்வே வாரியம் உத்தரவு

இதுதொடர்பாக அனைத்து மண்டல ரெயில்வே பொதுமேலாளர்களுக்கும் ரெயில்வே வாரியம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ரெயில்வே வாரியம் ஏற்கனவே அனுப்பிய கடிதத்தில் போட்டி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும், மற்ற மொழிகளில் இருக்கக்கூடாது என்ற அறிவுறுத்தல்கள் இடம் பெற்றிருப்பதாக சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. போட்டி தேர்வுகளுக்கான வினாத்தாள்களை உள்ளூர் அல்லது மாநில மொழிகளில் ரெயில்வே இடம் பெறச் செய்வதை ஒரு போதும் தடுக்க முடியாது.

100 சதவீதம் ‘டிக்’ செய்யும் வகையிலான வினாத்தாள் தற்போது நடைமுறையில் உள்ளது.

அறிவுத்திறனை பரிசோதிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள இதுபோன்ற வினாக்களுக்கான பதிலை ஒரு குறிப்பிட்ட மொழியில் மட்டும் எழுதுவது என்பது பொருத்தமானதாக தெரியவில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment