காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில் அக்பர்அகமது என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘சென்னை மாநகரில் உள்ள பூக்கடை வடக்கு போலீஸ் சரகத்தில் மட்டுமே ஒரு உதவி ஆணையர், ஒரு இன்ஸ்பெக்டர், 33 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 393 போலீஸ்காரர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.

இதேபோல சென்னையில் பிற இடங்களில் 791 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டுமே போலீஸ் துறையில் இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கும்போது தமிழகத்தின் பிற பகுதிகளில் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும். போலீசாரின் பணிச்சுமைகளைப் போக்கவே கடந்த 2013-ம் ஆண்டு காவல்துறை சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எனவே அந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தவும், காவல்துறையில் காலியாக உள்ள இடங்களை விரைந்து நிரப்பவும் தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., ஆகியோருக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்றம் இதில் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர், மனுவுக்கு வருகிற 26-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment