கல்வி கற்றுத் தரும் முறைபற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகம் வருகை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

கல்வி கற்றுத் தரும் முறை பற்றி பயிற்சி அளிக்க பின்லாந்து ஆசிரியர்கள் தமிழகத்துக்கு வருகின்றனர் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இதுகுறித்து “தினத்தந்தி”க்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:-

பின்லாந்து நாட்டின் கல்வி முறைகளை பார்வையிட்டு, தமிழக பள்ளிக்கல்வித் துறை மூலமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக அந்த நாட்டுக்கு சென்றிருந்தோம்.

அந்த நாட்டின் இந்திய தூதர் வாணி ராவ், பின்லாந்து நாட்டின் அறிவியல் கலாசாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர் ஹன்னா கோசன்னா, வடக்கு கார்லியா நகர மேயர் ரிஸ்டோ பார்ட்டியானின், போய்டியா மாநகர மேயர் அனு ஹே லியா ஆகியோரை சந்தித்து பேசினோம். அங்குள்ள இந்திய தூதரகத்தில் உள்ள உயர் அதிகாரி குமணன் மற்றும் இங்கிலாந்து நாட்டு உயர் அதிகாரிகளை சந்தித்து உரையாடினோம்.

பின்லாந்து நாட்டின் மக்கள் தொகை 55 லட்சம்தான். அங்குள்ள பள்ளிகளை பின்லாந்து அரசே நடத்தி வருகிறது. பள்ளிக்கூட நடைமுறைகளின்படி பிரி கே.ஜி., எல்.கே.ஜி., யூ.கே.ஜி. என்ற வரிசையில் வகுப்பறைகள் உள்ளன. அங்கிருந்தே வாழ்க்கைக்குத் தேவையான உடல் நலன், ஆரோக்கியம், வாழ்க்கை நடைமுறைகள், சுகாதாரம் கற்றுத் தரப்படுகிறது. மாணவனின் மனநிலைக்கு ஏற்ற கல்விகளை அளிக்கின்றனர்.

மாணவன் தனது சைக்கிளில் சென்றால்கூட ஹெல்மெட் அணிந்துதான் செல்ல வேண்டும் என்ற நடைமுறைகூட பள்ளியிலேயே கற்றுத் தரப்படுகிறது.

பள்ளியில் விளையாடும் நேரத்தில்கூட பாதுகாப்பு உடை அணிந்த பிறகுதான் விளையாட அனுமதிக்கிறார்கள்.

அந்த நாட்டின் வனப்பரப்பு 70 சதவீதமாகும். 6 சதவீதம் விவசாய நிலம். மற்ற இடங்களில்தான் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழம், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கான கட்டிடங்கள் உள்ளன. பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் வளர்ந்து நிற்கும் நாடு அது.

அங்குள்ள அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு 2 வேளை உணவு, படுக்கை வசதிகள் அளிக்கப்படுகின்றன. தனித்தனியாக ‘லாக்கர்’கள் அளிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.

6 வயதுக்குப் பிறகுதான் கல்வி கற்கத் தொடங்குகின்றனர். அதுவரை விளையாட்டுதான். 6 வயதுக்கு மேல்தான் வகுப்பறைகளில் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. 15-ம் வயதில் 9-ம் வகுப்புக்கு வரும்போது திறன் பயிற்சி அளிக்கின்றனர்.

உதாரணமாக, ஒரு தொழிற்சாலையில் உள்ள லேத் பட்டறையை பள்ளியிலும் வைத்துள்ளனர். அங்கு லேத் பட்டறைக்கான திறன் பயிற்சியை அளிக்கின்றனர். மோட்டார் வாகன பழுது நீக்கும் பிரிவு (ஒர்க்‌ஷாப்), வெல்டிங் எந்திரங்கள், மர வேலை உபகரணங்கள், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவக் கல்வி உபகரணங்கள் என அவரவர் விரும்பும் பயிற்சிக்கான அனைத்து உபகரணங்களும் வைக்கப்பட்டு உள்ளன.

அங்கு 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சிகள், அதுவும் நாட்டுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அவற்றை தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. உதாரணமாக, கழிவுநீர்ப் பாதைக்கு மேலே போடப்படும் கிரில் இரும்புச் சட்டங்கள் தேவைப்படுகிறது என்றால் அதை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறிப்பிட்ட பிரிவில் மாணவர்களுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து அந்தத் துறை சம்பந்தப்பட்ட தேவையான பயிற்சிகளை வழங்குகின்றனர். அங்குள்ள 55 லட்சம் மக்கள் தொகையில் 20 லட்சம் பேர்தான் மாணவர்கள். (தமிழகத்தின் 7.5 கோடி மக்கள் தொகையில் 1.32 கோடி பேர் மாணவர்கள்).

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் மருத்துவம், பொறியியல் போன்ற பெரிய கல்விகளை அவர்களே விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்கின்றனர். விருப்பத்துடன் தேர்வு செய்வதால் அந்தப் பாடங்களை நன்றாக கற்கின்றனர்.

தொழிற்சாலைகளின் மேற்கூரையின் உயரம் 20 அடிக்கும் மேலாக உள்ளது. எனவே மாசு அதிக அளவில் இல்லை. மாசினால் வரும் நோய்கள் இல்லை. ஏற்கனவே திட்டமிட்டு நகரத்தையும், வாழ்க்கை முறையையும் அமைத்து பின்லாந்து நாட்டினர் வாழ்ந்து வருகின்றனர்.

18 வயதில் அவர்கள் தங்களின் பெற்றோரை நம்பி வாழும் வாழ்க்கையை துறந்துவிடுகின்றனர். அந்த வயதிலேயே அவர்கள் கற்ற கல்வி மற்றும் பயிற்சியை வைத்து வேலை பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். உதாரணமாக, 9-ம் வகுப்பில் மருத்துவப் பயிற்சி பெற்ற ஒருவர் அடுத்தடுத்த படிப்பையும் கற்று, 18 வயதில் மருத்துவருக்கு முந்தைய நிலையை அடைந்து விடுகிறார். அவருக்கு அதற்கான சான்றிதழ் தரப்படுகிறது.

பெரிய பெரிய நிறுவனங்களும் தங்களின் சோதனைக் கூடங்களை பள்ளிகளில் அமைத்திருப்பார்கள். செல்போன் தயாரிப்பு, மரபுசாரா எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை அங்கு கற்றுத் தருகின்றனர். அப்படியே அவர்களை அந்தந்த கம்பெனிகள் ஸ்பான்சர் செய்து வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

அரசு 10 சதவீதம் உதவிகளைச் செய்தால், மாணவர்களுக்கு அதுபோன்ற நிறுவனங்கள் 90 சதவீதம் உதவிகளைச் செய்கின்றன. கல்விக்கென்று அங்குள்ள அரசு தனியாக நிதி ஒதுக்கவில்லை. ஆனாலும் நமது மாநில அரசு செலவிடும் அளவில்தான் அந்த அரசும் செலவு செய்கிறது.

நாம் சத்துணவு வழங்குவதுபோல, நல்ல உணவுகளை அனைத்து மாணவர்களுக்கும் பின்லாந்து பள்ளிகள் வழங்குகின்றன. இடையிடையே விளையாட்டுகளுக்கு அனுமதிப்பதால் மன ஓய்வு அவர்களுக்குக் கிடைக்கிறது.

15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை விகிதாசாரம் அங்கு பின்பற்றப்படுகிறது. பின்லாந்து ஆசிரியர்களின் பணி அர்ப்பணிப்பு அலாதியானது. அங்கு ஒரு மாணவனுக்கு இரண்டு பெற்றோர் என்றே என்னால் சொல்ல முடியும். அந்த அளவுக்கு தன் பிள்ளையைப் போல ஒவ்வொரு மாணவனையும் ஆசிரியர்கள் கவனிக்கின்றனர். எனவே கல்வியில் உலகில் முதலிடத்தை பின்லாந்துதான் பிடிக்கிறது.

அங்கு இருக்கும் அதே நிலையை இங்கு கொண்டு வர வேண்டும் என்றால் பல ஆயிரம் கோடி ரூபாய் தேவை.

நான் பார்த்துவிட்டு வந்த விஷயங்கள் பற்றி முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிக்க உள்ளேன். அருகில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாமா என்று எனக்கு யோசனை உள்ளது.

பெரிய ஆஸ்பத்திரி, நட்சத்திர ஓட்டல்கள், ஜவுளி ஆலைகள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள செயல்பாட்டை மாணவ, மாணவிகளை பார்க்கச் செய்யலாம். அந்தத் தொழில்களில் விருப்பம் உள்ளவர்களைத்தான் அழைத்துச் செல்ல முடியும். இதுபற்றி இன்னும் சிந்திக்க வேண்டும்.

பின்லாந்தில் எல்லா பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம்தான் உள்ளது. அந்த நாட்டைப் பார்த்ததன் விளைவு என்னவென்றால், அங்கிருந்து தமிழகத்துக்கு 30 ஆசிரியர்களை வரவழைக்க இருக்கிறோம். அவர்கள் ஒரு மாதம் தங்கி இருந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பார்கள்.

சென்னை, திருச்சி, மதுரை என 3 மண்டலங்களாக பிரித்து பயிற்சிகளை வழங்க இருக்கிறோம். கற்றுத் தரும் முறை பற்றி இந்த பயிற்சி இருக்கும்.

பின்லாந்தில் படித்துவிட்டு வெளிநாடுகளுக்கு அவர்கள் செல்வதில்லை. ஏனென்றால் அங்கேயே அவர்களுக்கு வேலை கிடைத்துவிடுகிறது. அவர்களுக்குத் தேவையான மகிழ்ச்சி அங்கேயே இருக்கிறது. மகன், மகளுக்காக சொத்து சேர்க்க வேண்டும் என்றெல்லாம் பதற்றமடையத் தேவையில்லை.

கல்வியை அரசே அளித்துவிடுகிறது. வேலையும் கிடைத்துவிடுகிறது. 60 வயதைத் தாண்டிவிட்டால், அவர் பணக்காரர் என்றாலும் ஏழை என்றாலும் ஓய்வூதியத்தை அரசு வழங்கிவிடுகிறது. பின்லாந்தில் பிறப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்றது. அங்குள்ள தட்பவெப்ப நிலையும் மிகவும் ரம்மியமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment