முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் ஆன்லைன் முறைக்கு எதிரான மனுவை பரிசீலிக்க வேண்டும் தேர்வு வாரியத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கான தேர்வை ஆன்லைன் மூலம் நடத்தக்கூடாது என்று கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவை வருகிற 25-ந் தேதிக்குள் பரிசீலிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரை சேர்ந்த ஆர்.கிருத்திகா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூன் 12-ந் தேதி வெளியிட்டது. இதையடுத்து, இந்த தேர்வுக்கு ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தோம். இந்த தேர்வு வருகிற 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி அறிவிப்பு வெளியிட்டது. கம்ப்யூட்டர் பிரிவில் பட்டம் பெற்றவர்கள்தான் ஆன்லைனில் தேர்வு எழுத முடியும். மற்ற பிரிவுகளில் படித்தவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, அறிவு இருப்பது கடினம்.

மொத்தம் 150 கேள்விகளுக்கு 3 மணி நேரத்தில் கம்ப்யூட்டரில் பதில் தர வேண்டும். இது மிக கடினமான விஷயம். ‘கீ ஆன்சரை’ சரிபார்க்கவும் முடியாது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுகூட ஆன்லைன் தேர்வாக நடத்தப்படுவதில்லை. மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வும் ஆன்லைன் மூலம் நடத்தப்படவில்லை.

ஏற்கனவே, கடந்த ஜூன் 23-ந் தேதி நடத்தப்பட்ட கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வில் ஆன்லைனில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் நடத்தப்பட்டது. அந்த தேர்விலும் குளறுபடிகள் ஏற்பட்டன.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கம்ப்யூட்டர் அறிவு இல்லாமல் எப்படி இந்த தேர்வை எழுத முடியும்? அதற்கான போதிய கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கொடுத்த கோரிக்கை மனுவும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சாதாரண முறையிலான எழுத்து தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘மனுதாரரின் கோரிக்கையை வரும் 25-ந் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து உரிய முடிவை அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

1 comment:

  1. If u want to accompany in this case am ready to join.
    Model online test is in English am Tamil teacher
    Sema la

    ReplyDelete