குழப்பம் ஏற்படுத்தும் போட்டி தேர்வுகள் ஐகோர்ட்டு கருத்து

போட்டி தேர்வுகள் மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் பெரம்பூரைச் சேர்ந்த மதன்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் இரண்டாம் நிலை காவலராக வேலை செய்கிறேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நான், தடய அறிவியல் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்வில் கலந்துகொண்டு, 62.30 மதிப்பெண் பெற்றேன். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ‘கட்-ஆப்’ மதிப்பெண் 63.30 என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்வில் கணிதம் தொடர்பான சில கேள்விகள் தவறு என்று கூறி, இந்த தேர்வில் கலந்துகொண்ட அருணாச்சலம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது. இதன்படி என்னுடைய மதிப்பெண் 62.80 ஆக உயர்ந்தது.

அதே தேர்வில், 162-வது கேள்வியும் தவறாக உள்ளது. இதுகுறித்து யாரும் வழக்கு தொடரவில்லை.

தவறான கேள்வி

அதாவது, 162-வது கேள்வி, ‘3 இயக்க எண்களின் எண்ணிக்கை?’ என்று கேட்டு, அதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இதே கேள்வியை ஆங்கிலத்தில் ‘3 டிஜிட் நம்பர்’ என்று கேட்டிருந்தது. எனவே, தமிழில் கேட்கப்பட்ட கேள்வி தவறானது.

எனவே, இந்த கேள்விக்கு பதில் அளித்த எனக்கு 0.5 மதிப்பெண் வழங்கினால், நான் தேர்ச்சி பெற்றுவிடுவேன். எனக்கு சப்-இன்ஸ்பெக்டர் பணி கிடைக்கும். எனவே, தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ஏ.எட்வின் பிரபாகர், ‘3 இலக்க எண்கள் என்பதற்கு பதில் 3 இயக்க எண்கள் என்று தவறாக கேள்வி கேட்டுள்ளனர்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி கூறியதாவது:-

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழ் தெரியவில்லை என்று தான் அர்த்தம். இலக்கத்துக்கும், இயக்கத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.

இப்போதெல்லாம், தேர்வு எழுதுபவர்களை குழப்ப வேண்டும். பதில் தெரியக்கூடாது என்ற நோக்கத்தில்தான் போட்டி தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நான் சட்டப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவன்.

அப்போது அந்த நுழைவுத்தேர்வில் 60 சதவீதம் சட்டம் தொடர்பாகவும், மீதமுள்ள 40 சதவீதம் ஒரு மாதத்தில் செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் அடிப்படையிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இதுதான் பொது அறிவாக அப்போது கருதப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை வேறு. எனவே, இந்த மனுதாரருக்கு 0.5 மதிப்பெண் வழங்கவேண்டும். கேள்வித்தாளை தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

அதற்கு அரசு தரப்பு வக்கீல் கதிர்வேல், இதுகுறித்து தேர்வு வாரியத்தின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறியதால், விசாரணை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment