தவறு இல்லாத கேள்வித்தாள் சாத்தியம் இல்லையா...? 

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வு. பல லட்சம் பேர் மிகுந்த எதிர்பார்ப்புடன் எழுதுகிறார் கள். கேள்வித் தாளில் தவறுகள் நேராத வண்ணம், பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தேர்வாணையத் துக்கு இருக்கிறதா.. இல்லையா...?

இன்னும் எத்தனை ஆண்டுகள்தாம் தவறான கேள்வி, தவறான விடைகள், தவறான தெரிவுகள் என்று அதே கதையை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டு இருக்கப் போகிறோம்? ஒரு கேள்வித் தாளை முழுமையாக படித்து சரி பார்க்கிற, உறுதி செய்கிற ஒருவர் கூடவா தேர்வாணையத்துக்குக் கிடைக் காமல் போய் விட்டார்கள்?

இரவு பகல் பாராது அயராது படித்து நம்பிக்கையுடன் தேர்வு மையத்துக்கு வரும் லட்சக்கணக்கான இளைஞர் களின் எதிர்காலத்துடன் நேரடித் தொடர் புடையது இந்தத் தேர்வு. குறைந்த பட்சம், பிழைகள் அற்ற வினாத் தாள் தருவதில் கூடவா இத்தனை அக்கறை இன்மை? மன்னிக்கவும். தேர்வாணையம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

இரண்டு தவறுகளை, எப்படி சரி செய்யப்போகிறது தேர்வாணையம்? அதிலும் ஒன்று, ஏற்றுக் கொள்ள முடியாத மாபெரும் தவறு. 'பொருத்துக' வகையில், இடது புறம் 4 சொற்கள்; வலது புறம் அதேபோல் 4. இடம் மாற்றி தரப்பட்டு இருக்கின்றன. சரியாகப் பொருத்த வேண்டும்.

ஆங்கிலத்தில், (d) Dissolution of the 1st Lok Sabha என்று சரியாகவே தரப்பட்டுள்ளது. ஆனால் தமிழில் இதற்கு, 'குடியரசு தினம்' என்று அச்சாகி உள்ளது. எங்கிருந்து இந்தச் சொல் திடீர் என்று உதித்ததோ தெரியவில்லை. மற்ற மூன்று தெரிவு களில் இருந்து விடை அளிக்கலாமே என்று வாதிடக்கூடாது.

‘குடியரசுதினம்' என்று எளிதான ஒரு தெரிவு இடது புறம் இருக்கும் போது, அதனுடன் பொருந்தி வரும் தெரிவைத்தான் வலது புறம் தேடிப் பார்ப்பார்கள். குழப்பத்தில் தள்ளி விட்டு, தெளிவாக ‘விளக்கம்' சொல் வது ஏற்கக் கூடியது அல்ல.

நம்மைப்பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அடுத்த கேள்வி இது. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகள் குறித்து விளக்குகிறது? தரப்பட்டு இருக்கும் விடைத் தெரிவுகள்: a) 14 b) 19 c) 32 d) 51அ. எல்லாமே சரியாகத்தானே இருக்கிறது. என்ன தவறு? இதே கேள்வி, ஆங்கிலத்தில் இவ்வாறு தரப்பட்டு உள்ளது: Which article of the Indian Constitution deals with fundamental rights? தமிழ்க் கேள்வி, அடிப்படைக் கடமைகள் பற்றியது. ஆங்கிலத்தில் அது, அடிப்படை உரிமைகளாக (fundamental RIGHTS) வந்துள்ளது.

ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு குறிப்புகளின்படி, ஆங்கிலம்- தமிழ் வினாக்களில் ஏதும் வித்தியாசம் இருப் பின், ஆங்கில வினாவே, சரியானதாக, கருத்தில் கொள்ளப்படும். இதிலே சோகம் என்னவென்றால், தமிழில் கேள்வி சரியாக அமைந்து உள்ளது. ஆங்கிலத்தில்தான் தவறுதலாக உள்ளது. இதற்கு ஆணையம் என்ன பதில் கூறப் போகிறது?

இதேபோல மற்றொரு கேள்வியில், ஆங்கிலத்தில், மாநில வரிகள் (taxes) என்றும், தமிழில் மாநில வளங்கள் என்றும் உள்ளது. பொது பாடப் பிரிவில் மொத்தமே 100 கேள்விகள்தாம். இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து, சரியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள எவ்வளவு நேரம் பிடித்து விடப் போகிறது? அலட்சியம், அக்கறை இன்மை, பிறரை துச்சமாக மதிக்கும் ஆணவப் போக்கு.. வேறு என்ன சொல்ல?

ஒவ்வொரு ஊருக்கும் போய், தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என்று உரக்கச் சொல்லி விட்டு வருகிறோம் நாம். நமது நம்பிக்கையை அசைத்துப் பார்க்கிறது ஆணையத்தின் அஜாக்கிரதை. இந்தத் தவறுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தா லும், வேறு சில நெருடல்களும் இருக்கத்தான் செய்கின்றன.

‘தூய்மை இந்தியா’ திட்டம் என்று சொன்னாலே புரியுமே, அதை ஏன் ‘ஸ்வச் பாரத் அபியான்’ என்று தர வேண்டும்? ‘ஜன் தன் யோஜனா’, ‘ஜல் சக்தி யோஜனா’ என்றெல்லாம் பெயர் களை அப்படியே தந்து, ஏன் அச்சுறுத்த வேண்டும்..? இப்பெயர்களுக்கான தமிழாக்கம் தந்தால் என்ன குறைந்து விடப்போகிறது? திட்டங்கள்தாம் முக்கியமே தவிர்த்து, திட்டங்களின் பெயர்கள் அல்ல. பெயர்களை தமிழில் சொன்னால், திட்டத்தின் பயன்பாடு புரிந்து விடப் போகிறது.

இந்த அடிப்படை உண்மை, போட்டித் தேர்வுகளின் வினாத் தாள்களில்கூட அடிபட்டுப் போகிறது. என்ன செய்ய? அதேநேரம் வேறொன் றும் நடந்து இருக்கிறது. ஒரு வினாவில், சரக்கு மற்றும் சேவை வரி என்று தரப்படவில்லை. மாறாக ‘GST’ என்று ஆங்கிலத்திலேயே தமிழிலும் குறிக் கப்பட்டுள்ளது? இது ஏன்? ஒன்று, வட மொழி; அல்லது, ஆங்கிலம். இணையான தமிழ்ச் சொல் ஏன் தரக்கூடாது?

இதற்கும், அலட்சியமே காரணமாக இருக்கலாம். தேர்வாணையம் இத் தவறைச் செய்து இருக்க வேண்டாம். இனி, கேள்விகளின் தரம். பொதுவாக சிறப்பானதாகவே தெரிகிறது.

உயிரிகளின் இனச் செல்கள், தமனிகள் (artery) - சிரைகள் (veins) வேறுபாடு, தனிமங்களின் லத்தீன் பெயர்கள், ஒருவித்தலைத் தாவரங்கள், ‘மைட்டாசிஸ்’ உடல் செல்கள்; புரோகேரியோட்டு செல்கள், மின் வேதிக் கலனில் நிகழும் வினை, பொதுப் பயன்பாட்டில் உள்ள பூச்சிக் கொல்லி.. ஆகியன, அறிவியல் பாடப் புத்தகங்களில் இருந்து வந்துள்ள வினாக்கள்.

காமராசர் எத்தனை ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்? சிதம்பரம் நடராசர் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்த மன்னர் யார்? மதுரை கொண் டான் என்று புகழப்பட்டவர் யார்? சிம்ம விஷ்ணுவின் மகன் யார்? ஆகிய தமிழக வரலாறு சார்ந்த கேள்விகள் மனதுக்கு இதமாக உள்ளன.

சுவாரஸ்யமான கேள்விகளும் மிகுந்து இருக்கின்றன. தமிழ்நாட்டில், பனகல் அமைச்சரவையில், பணியாளர் தேர்வு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?, 200-க்கும் 300-க்கும் இடையே 6, 8, 9 ஆல் வகுபடும் எண்கள் எத்தனை?

சுத்தமான குடி நீர் பெறுதல் - எந்தப் பிரிவின் கீழ் அடிப்படை உரிமை? இந்தியக் கல்விமுறை, அடிப்படையில் எத்தனை நிலைகளைக் கொண்டுள் ளது? 1951 முதல் இந்தியப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை? 100% சூரிய ஆற்றலைப் பயன் படுத்தும் உலகின் முதல் மெட்ரோ ரயில் எது? 'மது அருந்தி வாகனம் ஓட்டுவதைக் கண்டுபிடிக்கும் சுவாசப் பகுப்பாய்வு சோதனையில் பயன்படும் சேர்மம் (the compound) எது?

ஆனாலும், மிகவும் புத்திசாலித் தனமான கேள்வி என்று இவற்றைச் சொல்லலாம்: ரீனா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 மற்றும் 36. எனில், 8 ஆண்டுகளுக்கு முன்பு, உஷா மற்றும் ரீனாவின் வயது விகிதம் என்ன? A) 7:4 B) 6:5 C) 2:3 D) 4:7.

ஆரம்பத்தில், ரீனா மற்றும் உஷா; கேள்விப் பகுதியில், உஷா மற்றும் ரீனா என்று மாறி உள்ளது. கவனம்தான் - இந்த வினாவின் முக்கிய அம்சம். பலே!

வினாக்களை தரமாகத் தேர்வு செய்துவிட்டு, வினாத்தாள் தயாரிப்பில் கோட்டை விட்டு விட்டார்களே! வருத்த மாக இருக்கிறது. இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே, தேர்வாணையத்துக்கு, குரூப் 4 தேர்வு சொல்லும் செய்தி.

கணிதம், அறிவியல், வரலாறு பாடங்களின் கேள்விகளுடன் ஒப் பிட்டுப் பார்த்தால், தமிழ் மொழித் தாள் அப்படி ஒன்றும் கடினமாகத் தெரியவில்லை.

கிராமப்புறத் தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிக்குள் நுழைவார்கள் என்றே தோன்றுகிறது. வாழ்த்துகள்!

No comments:

Post a Comment