வருமான வரி மதிப்பீடு ஆய்வுக்கு புதிய நடைமுறை அடுத்த மாதம் 8-ந் தேதி அமல்

வருமான வரி மதிப்பீடு ஆய்வுக்கு புதிய நடைமுறை வருகிறது. அதிகாரிகளை சந்திக்காமல் வேலையை முடித்துக்கொள்ள வழி வகுக்கும் இந்த நடைமுறை அடுத்த மாதம் 8-ந் தேதி அமலுக்கு வருகிறது.

வருமான வரி செலுத்துகிறவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது கவனக்குறைவாகவோ தவறான தகவல்களை அளித்து விட்டால், ஆய்வின்போது, அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கடுமையாக நடந்துகொள்வதாக பொதுவான புகார் உள்ளது.

இனி இத்தகைய புகார்கள் எழாது. இதற்கு வழிவகுத்த நடைமுறை முடிவுக்கு வருகிறது.

இது தொடர்பாக மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அப்போது அவர், “தற்போது உள்ள வருமான வரி ஆய்வு மதிப்பீடுகளில் வரிசெலுத்துவோர் மற்றும் வருமான வரி துறைக்கு இடையே உயர்மட்ட அளவில் தனிப்பட்ட கலந்துரையாடல்கள் நடக்கின்றன. இது வருமான வரி அதிகாரிகள் தரப்பில் விரும்பத்தகாத நடைமுறைகளுக்கு வழி வகுக்கிறது. இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்கவும், பிரதமரின் தொலைநோக்குப்பார்வைக்கு வடிவம் கொடுக்கும் வகையிலும் மின்னணு முறையில் முகமற்ற மதிப்பீடு முறை கொண்டு வரப்படும். இதில் மனிதர்கள் முகத்துக்கு முகம் பார்ப்பது தவிர்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என அறிவித்தார்.

அதன்படி, இ-மதிப்பீடு செயல்முறை என்ற புதிய நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்துகிறது.

இந்த நடைமுறை, மறைமுக வரி மதிப்பீடு முறையாகும். எனவே இது முகமற்ற அல்லது பெயரில்லாத மதிப்பீடு முறை எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த முறையின்கீழ், வருமான வரி மதிப்பீடு ஆய்வு தொடர்பாக வருமான வரி செலுத்துவோருக்கு, வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்ப மாட்டார்கள். தேசிய இ-மதிப்பீட்டு மையம்தான் நோட்டீஸ் அனுப்பும்.

இந்த நோட்டீசுக்கு வரிசெலுத்துவோர் 15 நாளில் பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலைப் பெற்ற பின், அவர்களின் ‘கேஸ்’ (விவகாரம்) தானியங்கி முறையைப் பயன்படுத்தி ஒரு அதிகாரிக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அவர் அதைக் கையாளுவார்.

இந்த புதிய முறையின்கீழ், வருமான வரி செலுத்துகிறவரோ, அவரது பிரதிநிதியோ வருமான வரித்துறை நடவடிக்கை தொடர்பாக தேசிய இ-மதிப்பீட்டு மையம் முன்பாகவோ, மண்டல இ மதிப்பீட்டு மையத்திலோ அல்லது இந்த முறையின்கீழ் உருவாக்கப்படுகிற ஒரு பிரிவின் முன்பாகவோ நேரில் ஆஜராக தேவையில்லை. அப்படி ஆஜராகாமலேயே அவர்கள் தங்கள் வேலையை முடித்துக்கொள்ள முடியும்.

அதே நேரத்தில் வருமான வரி செலுத்துகிறவர், தங்கள் பிரதிநிதி வருமான வரி அதிகாரியை நேரில் சந்தித்து, விளக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் இதுபோன்ற விசாரணைகள், வீடியோ பதிவு அல்லது அத்தகைய வேறு வசதிகள் மூலமோ பிரத்யேகமாக நடத்தப்படும்.

இந்த புதிய நடைமுறை பற்றிய அறிவிக்கையை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 8-ந் தேதி விஜயதசமி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment