அடுத்தகட்டமாக 7 ஆயிரம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு

தமிழகத்தில் முதல்கட்டமாக அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது. அடுத்த கட்டமாக தமிழகத்தில் மொத்தமுள்ள 8 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் தனியார் பள்ளிகள் தவிர 7 ஆயிரம் அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் விரைவில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு அமலுக்கு வர உள்ளது. இதற்காக பயோமெட்ரிக் பதிவு கருவிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பே நடுநிலைப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பயோமெட்ரிக் பதிவு தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு விளக்க வருகிற 13ம் தேதி வீடியோ கான்பரன்சிங்கிற்கு பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.


இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறை அமல்படுத்துதல் தொடர்பாக வருகிற 13ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பள்ளிக் கல்வி இயக்குநர், தேசிய தகவலியல் மைய இயக்குநர் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஆதார் நடைமுறை தொடர்பான விரிவான விவரங்கள் தேசிய தகவலியில் மைய தொழில்நுட்ப வல்லுநர்களால் விளக்கப்படுகிறது. 13ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடக்கும் வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் அமைந்துள்ள தேசிய தகவலியல் மையத்தில் தவறாது பங்கேற்க வேண்டும். மேலும் ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பெயர்கள் ‘ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி (AEBAS)’ இணையதளத்தில் விடுபட்டிருந்தால் அதன் விவரங்களை மாவட்ட வாரியாக உரிய படிவத்தில் தொகுத்து கூட்டத்தின் போது கொண்டு வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’ஆசிரியர்களுக்கு 12 இலக்க ஆதார் எண்ணில் கடைசி 8 எண்கள் வழங்கப்படும். அந்த எண்ணை ஆசிரியர் பள்ளிக்கு வரும் போது பயோமெட்ரிக் கருவியில் பதிவு செய்து ரேகையையும் பதிவு செய்ய வேண்டும். அதில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு முதல் பதிவு வருகையாக எடுத்துக் கொள்ளப்படும். கடைசி பதிவு வருகைப் பதிவு முடிவாக எடுத்துக் கொள்ளப்படும். பயோமெட்ரிக் கருவிகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்த முறை அமலுக்குவரும்’ என்றார்.

No comments:

Post a Comment