5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியம் இல்லாதது குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்: மனநல ஆலோசகர் பேட்டி

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அவசியமற்ற ஒன்று என்றும், இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும் மனநல ஆலோசகர் டாக்டர் க.செ.சுப்பையா தெரிவித்தார்.

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009, 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு எந்த பொதுத்தேர்வும் நடத்தக்கூடாது, இடைநிற்றல் என்பதும் இருக்கக்கூடாது என்று தெரிவித்தது. ஆனால் மத்திய அரசு இந்த சட்டத்தில் நடப்பு ஆண்டு திருத்தம் செய்தது. அதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அதில் தெரிவித்தது.

மத்திய அரசின் இந்த திருத்தத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு, தற்போது 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இது மாணவர்களுக்கு மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அவசியமானதா?, அதனால் அவர்கள் எந்த மாதிரியான பாதிப்பை சந்திப்பார்கள்? என்பது குறித்து சென்னை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற மனநல ஆலோசகர் டாக்டர் க.செ.சுப்பையா (வயது 75) கூறியதாவது:-

பொதுவாக பருவத்திலேயே பயிர் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அது குழந்தைகளுக்கு சரியாக பொருந்தும். தற்போது 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்று அறிவித்து இருக்கிறார்கள். இது அவசியமற்ற ஒன்று. இதனால் குழந்தைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும், பெற்றோரும் இதில் பாதிக்கப்படுவார்கள். முன்பு 8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு என்பது இல்லாமல் இருந்தது. அது நல்ல திட்டம். மனதளவில் முதிர்வு என்பதை 16 வயதில் தான் பிள்ளைகள் எட்டி பிடிப்பார்கள். அவர்கள் ஒரு குறிக்கோளை முன்வைத்து வெற்றியை நோக்கி செல்வார்கள்.

அவர்களுக்கு இதுபோன்ற (பொதுத்தேர்வு) தடைகள் வரும்போது குழப்பத்தில் சிக்கிக்கொள்வார்கள். எந்த உத்வேகத்தில் அவர்கள் பயணத்தை தொடங்கினார்களோ?, அப்படியே பின்வாங்கி விடுவார்கள். வேதிப்பொருள் வைத்து பழுக்கும் பழத்துக்கும், தானாக பழுக்கும் பழத்துக்கும் வித்தியாசம் அதிகம் இருக்கிறது.

சுதந்திர வாழ்க்கை

குழந்தைகளுக்கு சுதந்திரம் என்பது கட்டாயம் கொடுக்க வேண்டிய ஒன்று. அதற்காக கட்டவிழ்த்தும் விடக்கூடாது. கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. கனிவும், கண்டிப்பும் ஒருசேர இருக்கும்போது மனதளவில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

படிக்கும் குழந்தைகளுக்கு சுதந்திர வாழ்க்கை இருக்க வேண்டும். நடுவில் கொஞ்சம் தடைகள் வந்தாலும் சோர்ந்துவிடுவார்கள். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது. ஆகவே செயல்முறை அறிவில் அவர்களை வளர்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற பொதுத்தேர்வு அவர்களுக்கு இப்போது அவசியம் இல்லை.

கல்வி அறிவு, தொழில் திறமை வேண்டும். அதை அவர்களுக்கு சரியான முறையில் பள்ளி பருவத்திலேயே தெளிவுபடுத்த வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வே தேவையில்லாத ஒன்று தான். குழந்தைகளின் மனநிலைக்கு தகுந்த கல்வி கொடுத்து, அவர்களின் ஆளுமைத்திறனுக்கு ஏற்ப உயர்கல்விக்கு கொண்டு செல்லலாம்.

பொதுத்தேர்வு என்றாலே போட்டிக்கு வழிவகுக்கும். போட்டி என்று வரும்போது குழந்தைகளின் மனநிலை மிகவும் பாதிக்கும். ஒருவர் வெற்றி பெற்று, மற்றொருவர் தோல்வி கண்டால் அதிகம் வருந்துவார்கள். எனவே பொதுத்தேர்வை குழந்தைகள் ஒரு தடை கல்லாகவே பார்ப்பார்கள்.

காமராஜர் குழந்தைகள் அதிக தூரம் நடக்கக்கூடாது என்று நினைத்தார். அப்படி நடந்து சென்றால் சிரமப்படுவார்கள். மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அறிந்தார். அதனாலேயே அருகருகே பள்ளிக்கூடங்களை திறந்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார். அவரைப்போல குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

திறமை வேறு, ஏட்டுக்கல்வி வேறு. கல்வி வேண்டும். அதை குழந்தைகளின் எண்ணத்துக்கு ஏற்றாற்போல் முறைப்படுத்த வேண்டும். குழந்தைகளின் மனரீதியில் இருந்து பார்க்கும்போது இந்த பொதுத்தேர்வு தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment