உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

சிறப்பு அந்தஸ்தை இழந்த காஷ்மீர்

ஜம்முவில் சாலை வெறிச்சோடி கிடப்பதையும், ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பதையும் படத்தில் காணலாம்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், 72 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு, காஷ்மீரை புதிய வண்ணத்தில் நாடு காணப்போகிறது. மோடி அரசு, காஷ்மீருக்கு கூடுதல் படைகளை அனுப்பியது. அமர்நாத் யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர்களை உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது. இது எதற்காக என்ற ‘சஸ்பென்ஸ்’, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடாளுமன்றத்தில் காஷ்மீர் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிறகு நீங்கியது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதை ஆதரிப்பவர்கள், இது ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம், ஒரே சட்டம் வரிசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று நம்புகிறார்கள். இந்த சிறப்பு அந்தஸ்து காரணமாக, நாட்டின் பிற பகுதி மக்களுக்கு கிடைத்து வரும் வளர்ச்சியின் பலன்கள், காஷ்மீர் மக்களுக்கு மட்டும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

370 மற்றும் 35ஏ பிரிவுகளை நீக்குவோம் என்று பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இந்த வாக்குறுதிகள், நீண்ட காலமாகவே அக்கட்சியின் நிலைப்பாடாக இருக்கின்றன. மேலும், 370-வது பிரிவு, காஷ்மீரின் பொருளாதாரத்தில் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கி, சாதாரண மக்களின் வாழ்க்கையை மோசமாக்கி விட்டதாக பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “370-வது பிரிவு காரணமாக, இன்று எந்த முதலீடும் காஷ்மீருக்கு வருவதில்லை. ஓட்டல்கள் உள்ளிட்ட கட்டமைப்பு திட்டங்களில் யாரும் முதலீடு செய்ய விரும்புவது இல்லை” என்று சொல்கிறார்.

ஆனால், இந்த நடவடிக்கை, நாட்டின் கூட்டாட்சி முறையில் தலையிடும் செயல் என்றும், அரசியல் சட்ட பிரிவுகளை தன்னிச்சையாக பயன்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த முடிவு, காஷ்மீர் மக்களை மேலும் தனிமைப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன. மற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களை தன்னிச்சையாக கவிழ்க்கும் நடவடிக்கையின் தொடக்கமாக இருக்குமோ என்றும் அச்சம் தெரிவித்துள்ளன.

ஆனால், நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சிகளின் அச்சத்தை நிராகரித்தார். “நாடு 70 ஆண்டுகளுக்கு மேலாக காத்துக்கொண்டிருக்கிறது. காஷ்மீர் மாநிலம், இந்தியாவுடன் ஒருங்கிணைய இது வழிவகுக்கும். ஜனசங்க காலத்திலும், பின்னர் பா.ஜனதாவாக மாறிய பிறகும் இதுதான் எங்கள் உறுதிப்பாடாக இருந்து வருகிறது. மேலும், இதுதான் எங்கள் தேர்தல் செயல் திட்டம். 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் முக்கிய இடம் பிடித்துள்ளது” என்று அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன், மாநிலங்களவையில் அளித்த பதிலுரையின்போது, பாலின பாகுபாட்டையும் முன்வைத்தார். “காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, அங்குள்ள பெண்களுக்கு சம உரிமையை அளிக்காது. ஏனென்றால், அங்கு பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது. காஷ்மீர் மாநில பெண்கள், வேறு மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அவர்களது குடியுரிமை பறிக்கப்படுவதுடன், சொத்துரிமையும் பறிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “370-வது பிரிவு காரணமாக, மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களின் பலன்கள், காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காது. மற்ற மாநிலங்களை போலவே, காஷ்மீருக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற வேண்டும். ‘அனைவருக்கும் வளர்ச்சி’ என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தியா மாறிவிட்டது. காஷ்மீரில் கூட மக்கள் அமைதியையும், வளத்தையும் விரும்புகிறார்கள்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘370-வது பிரிவு நிலையற்றதும், தற்காலிகமானதும் ஆகும். எனவே ஜனாதிபதி உத்தரவு மூலம் இந்த பிரிவை ரத்து செய்ய முடியும். இந்தியா தனது அரசியல் சாசனத்தை பெற்றவுடன் அரசியல் நிர்ணயசபை கலைக்கப்பட்ட நிலையில், இந்த 370-வது பிரிவு ரத்து விவகாரத்தில் மட்டும் என்ன பிரச்சினை?’ என்று கேள்வி எழுப்பினார்.

370-வது பிரிவை நீக்குவதன் மூலம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் முதலீடுகள் குவியும், வேலைவாய்ப்புகள் பெருகும் எனவும், அங்கு நிலம் வாங்குவதற்கான கட்டுப்பாடுகள் நீங்குவதால், வர்த்தகம் எளிதாகும் என்றும் அரசு நினைக்கிறது. மேலும் மாநிலத்தின் வளர்ச்சி பற்றாக்குறையால், கல்வீச்சு மற்றும் ஆயுதம் ஏந்தும் மாநில இளைஞர்களுக்கு இதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும் எனவும் அரசு நம்புகிறது.

உள்துறை மந்திரி அமித்ஷா தனது உரையில், ‘நாட்டில் அடுத்தடுத்து அமைந்த அரசுகள் காஷ்மீருக்கு ஏராளமான நிதியை ஒதுக்கின. ஆனால் அங்குள்ள மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தொடர்ந்து ஏழைகளாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒருசில அரசியல் குடும்பங்கள் மட்டும் தங்களை வளமாக்கி கொண்டுள்ளன’ என குறிப்பிட்டார்.

முன்னதாக நாட்டில் நிதி நெருக்கடி அமலில் இருந்த காலகட்டத்தில், காஷ்மீரில் 370-வது பிரிவு இருந்ததால் அங்கு இதை அமல்படுத்த முடியவில்லை. ஆனால் தற்போது இந்த பிரிவு விலக்கிக்கொள்ளப்பட்டு இருப்பதன் மூலம், அந்த தடை நீங்கியுள்ளது.

மேலும் 370-வது பிரிவு நீக்கப்பட்டு இருப்பதன் மூலம் சிறுபான்மையினருக்கு சமூக-பொருளாதார-நீதி, மாநிலத்தில் இந்திய கொடி பறப்பதற்கான வாய்ப்பு, இரட்டை குடியுரிமை நீக்கம், முதலீடுகளுக்கான கதவு திறப்பு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிப்படை, ஏழை குழந்தைகளுக்கும் கல்வி உரிமையின் பலன்கள் கிடைத்தல், பாலின பாகுபாடு நீக்கம் போன்ற பலன்கள் காஷ்மீருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இரட்டை குடியுரிமை தொடர்பான முரண்பாடு முற்றிலும் நீங்கிவிடும்.

காஷ்மீரை ஒருங்கிணைந்த இந்தியாவாக உருவாக்க 370-வது பிரிவு அத்தியாவசியம் என காங்கிரஸ் கருதியது. ஆனால் பா.ஜனதாவோ பிரிவினை, காஷ்மீரிகளை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்துதல், கடும் கட்டுப்பாடுகளை விதித்தல் போன்றவற்றுக்கே இந்த பிரிவு வழிவகுப்பதாக கருதுகிறது.

தற்போது நிகழ்ந்திருக்கும் இந்த 370-வது பிரிவு ரத்து நடவடிக்கை ஒரே இரவில் உருவானதல்ல. வலுவான மோடி-ஷா கூட்டணிக்கே உரித்தான வலிமையான நடவடிக்கையின் தொடர் நிகழ்வாகவே இது நடந்துள்ளது. இந்த திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மோடி, அமித்ஷா இருவரும் மிகவும் கவனமாக உருவாக்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் தொடக்கமாக, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சர்ச்சைக்குரிய கருத்தை சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதாவது காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக சில வாரங்களுக்கு முன்பு அவர் கூறினார். ஆனால் மத்திய அரசு இதற்கு உடனடியாக மறுப்பு வெளியிட்டது. அத்துடன் அந்த பிரச்சினையும் அடங்கியது.

அதேநேரம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து அமர்நாத் யாத்ரீகர்களை வெளியேற்றியது, கூடுதல் துணை ராணுவ படைகளை காஷ்மீருக்கு அனுப்பியது, உபா சட்டத்தை நிறைவேற்றியது, காஷ்மீர் அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அடுத்தடுத்து மேற்கொண்டது. இறுதியாக 370-வது சட்டப்பிரிவை நீக்கும் ஜனாதிபதி உத்தரவையும் பெற்றுவிட்டது.

அரசியல்சாசன சிக்கல் நிறைந்த இந்த விவகாரத்தை கையாள மோடி-ஷா கூட்டணி சிறப்பான வழி ஒன்றை கையாண்டு இருக்கிறது. இதை அமித்ஷாவும் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தத்தை தாக்கல் செய்தபோது வெளிப்படுத்தினார். அதாவது, ‘மாநில சட்டசபை செயல்படாமல் இருக்கும்போது, காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில் முடிவு எடுக்கும் பொறுப்பு நாடாளுமன்ற இரு அவைகளுக்கே இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

இவ்வாறு இந்த திட்டத்தை வகுப்பதற்கு மோடி-அமித்ஷா கூட்டணி போதுமான நேரத்தை எடுத்து உள்ளனர். இதற்காகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதில் சட்ட திருத்தமும், தீர்மானமும் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கு வசதியாகவே பா.ஜனதா எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

1 comment: