உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

370, 35-ஏ பிரிவில் காஷ்மீருக்கு கிடைத்த சலுகைகள்

காஷ்மீருக்கு 370 மற்றும் 35-ஏ பிரிவில் இதுவரை கிடைத்த சலுகைகள் என்ன என்பதை பார்ப்போம்.

இயற்கை எழில் நிறைந்த ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் 1339-ல் இருந்து 1819-ம் ஆண்டு வரை ஷாமிர் வம்சம், முகலாயர், ஆப்கன் துரானி வம்சம் ஆகியோரால் ஆளப்பட்டது. அதன்பிறகு ரஞ்சித் சிங் என்ற சீக்கிய மன்னர் கைப்பற்றினார்.

ஆனால் 1846-ல் ஆங்கிலேய படைகளால் சீக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அதன்பிறகு ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜம்மு அரசர் குலாப்சிங் காஷ்மீரை பெற்று காஷ்மீரின் முதல் மன்னராக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து 1947-ம் ஆண்டு வரை அவரது வழித் தோன்றல்கள்தான் காஷ்மீரை ஆண்டு வந்தனர். கடைசியாக இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் மன்னர் ஹரிசிங் காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்டு வந்தார்.

இந்தியாவில் இருந்த பல்வேறு சமஸ்தானங்கள் இந்திய ஆளுகையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டன. ஆனால் காஷ்மீரை உடனடியாக இணைக்க முன்வரவில்லை. இதனால் காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க தொடங்கியது. இதையடுத்து இந்தியாவின் உதவியை ஹரிசிங் நாடினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 3 மாதங்களுக்கு பிறகு அதாவது 26-10-1947 அன்று மன்னர் ஹரிசிங் தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்புக்கொண்டார். அன்றைய தினம் மன்னர் ஹரிசிங்கும், இந்திய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மறுநாள் அரசாணை வெளியிடப்பட்டது.

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது ஷேக் அப்துல்லா, காஷ்மீர் ஆட்சி பொறுப்பில் இருந்தார். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் கேட்டு ஷேக் அப்துல்லா வலியுறுத்தினார். அதை நேருவும் ஏற்றுக்கொண்டார். இந்த சிறப்பு சட்டத்தை உருவாக்க டாக்டர் அம்பேத்கரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

பின்னர் கோபாலசாமி அய்யங்காரால் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் சட்டம் 370-ல் 35-ஏ உருவாக்கப்பட்டது. அந்த சிறப்பு சட்டத்துக்கு அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அனுமதி அளித்தார்.

அரசியல் சட்டப்பிரிவு 368-ன்படி, அரசமைப்பில் எந்த ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றாலும், புதிதாக ஒரு பிரிவை ஏற்படுத்துவது என்றாலும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெற்ற பிறகே கொண்டு வர முடியும். ஆனால் சட்டப்பிரிவு 35-ஏ நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை. அதனால் அரசமைப்பு சட்டத்திற்கே எதிரானது என்ற வாதம் இன்று வரை இருந்து வந்தது.

தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுதல் கீழ்தான் 370-வது பிரிவு வரையறுக்கப்பட்டது. ஆனாலும் 50 வருடங்களுக்கும் மேலாக இந்த சட்டத்தின் கீழ் காஷ்மீருக்கு தனியாக சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தன. மற்ற மாநில சட்டப்பேரவை அதிகாரங்களுடன் ஒப்பிடும் போது காஷ்மீர் சட்டப்பேரவை அதிகாரங்கள் மாறுபட்டவை. கூடுதல் அதிகாரம் கொண்டவை.

சலுகைகள்

 ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர மற்ற துறைகள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது.

 காஷ்மீரில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அசையா சொத்துகள் வாங்க முடியாது. ஆனால் காஷ்மீர் மாநிலத்தவர்கள் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் அசையா சொத்துகள் வாங்க உரிமை உண்டு.

 காஷ்மீர் மாநில பெண்கள் வேறு மாநிலத்தவரை திருமணம் செய்தால் அந்த பெண்களும் காஷ்மீரில் அசையா சொத்துகள் எதுவும் வாங்க முடியாது.

 ஆனால் காஷ்மீர் மாநில ஆண்கள் வேறு மாநில பெண்களை திருமணம் செய்தால் அசையா சொத்துகள் வாங்கலாம்.

 காஷ்மீர் மாநில சட்டப்பேரவை பதவிக்காலம் 6 ஆண்டுகள்.

 மாநில எல்லைகளை குறைக்கவோ, கூட்டவோ நாடாளுமன்றத்தால் முடியாது.

 சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்களை ரத்து செய்ய முடியும்.

 தனி கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.

 அரசியல் சாசனத்தின் 238-வது பிரிவு காஷ்மீர் மாநிலத்துக்கு பொருந்தாது.

No comments:

Post a Comment